தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
வார்குழையை யெட்டி வேளினைம ருட்டி
மாயநம னுக்கு ...... முறவாகி
மாதவம ழித்து லீலைகள் மிகுத்து
மாவடுவை யொத்த ...... விழிமாதர்
சீருட னழைத்து வாய்கனிவு வைத்து
தேனித ழளித்து ...... அநுபோக
சேர்வைதனை யுற்று மோசம்விளை வித்து
சீர்மைகெட வைப்ப ...... ருறவாமோ
வாரினை யறுத்து மேருவை மறித்து
மாகனக மொத்த ...... குடமாகி
வாரவணை வைத்து மாலளித முற்று
மாலைகளு மொய்த்த ...... தனமாது
தோரணி புயத்தி யோகினி சமர்த்தி
தோகையுமை பெற்ற ...... புதல்வோனே
சூர்கிளை மடித்து வேல்கர மெடுத்து
சோலைமலை யுற்ற ...... பெருமாளே.
- வார் குழையை எட்டி வேளினை மருட்டி மாய நமனுக்கும்
உறவாகி
நீண்ட குண்டலத்தை எட்டியும், மன்மதனைக் கூட மருட்சியுறச் செய்தும், மாயத்தில் வல்ல யமனுடன் உறவு பூண்டும், - மா தவம் அழித்து லீலைகள் மிகுத்து மா வடுவை ஒத்த விழி
மாதர்
நல்ல தவ நிலையை அழித்து, காம லீலைகள் அதிகமாகி, மாவடுவுக்கு நிகரான கண்களை உடைய விலைமாதர்கள், - சீருடன் அழைத்து வாய் கனிவு வைத்து தேன் இதழ் அளித்து
அநுபோக சேர்வை தனை உற்று
மரியாதையுடன் அழைத்து, வாய்ப் பேச்சில் இனிமையை வைத்துப் பேசி, தேன் போல் இனிக்கும் வாயிதழைத் தந்து, காம அநுபோகச் சேர்க்கையில் சிக்க வைத்து, - மோசம் விளைவித்து சீர்மை கெட வைப்பர் உறவாமோ
மோசம் விளையும்படிச் செய்து, நன்மையை அழிய வைக்கும் வேசியர்களுடைய உறவு நல்லதாகுமோ? - வாரினை அறுத்து மேருவை மறித்து மா கனகம் ஒத்த
குடமாகி
கச்சைக் கிழித்து மீறி, மேரு மலையையும் மிஞ்சி, சிறந்த பொன் குடம் போல் விளங்கி, - வார(ம்) அணைவைத்து மா லளிதம் உற்று மாலைகளும்
மொய்த்த தன மாது
அன்பாகிய ஆதரவை வைத்து, மிக்க அழகைக் கொண்டு, மாலைகளும் நெருங்கிய மார்பகங்கள் விளங்கும் மாது, - தோர் அணி புயத்தி யோகினி சமர்த்தி தோகை உமை பெற்ற
புதல்வோனே
கழுத்தணியாகிய (தோரை என்ற) அணி வடத்தைப் பூண்ட புயங்களை உடையவள், யோகினி, சாமர்த்தியம் நிறைந்தவள், மயில் போன்ற உமா தேவி பெற்ற புதல்வனே, - சூர் கிளை மடித்து வேல் கரம் எடுத்து சோலை மலை உற்ற
பெருமாளே.
சூரனையும் அவன் சுற்றத்தாரையும் அழித்து, வேலாயுதத்தைக் கையில் ஏந்தி சோலை மலையாகிய பழமுதிர் சோலையில் வீற்றிருக்கும் பெருமாளே.