தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த ...... தனதான
Yaazh Music
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து ...... தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து ...... பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று ...... தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப ...... தறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம லைந்து ...... திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று ...... தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து ...... எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற ...... பெருமாளே.
- வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
வம்பு செய்வது போன்று அடர்ந்து நெருங்கி வேலொத்த கண்களை உடைய பெண்களின் - மாயமது ஒழிந்து தெளியேனே
மயக்குதல் என்னை நீங்கி நான் தெளிவு பெறவில்லையே. - மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
நல்ல மலர்களால் ஆன மாலைகளைத் தொடுத்து - மாபதம் அணிந்து பணியேனே
நின் சீரிய அடிகளில் சூட்டி நான் பணியவில்லையே. - ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
முதலில் தொடங்கி இறுதி வரை உள்ள சகல நலன்களும் - ஆறுமுக மென்று தெரியேனே
ஆறுமுகம்* என்ற உண்மையை நான் தெரிந்து கொள்ளவில்லையே. - ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது
ஒப்பற்ற ஓங்கார மந்திர ரூபநிலை கொண்டது - ஆடுமயி லென்பது அறியேனே
ஆடுகின்ற நிலையிலுள்ள மயில்தான் என்று அறியவில்லையே. - நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நாதமும் விந்துவும் சேர்ந்து உருவாக்கிய இவ்வுடலால் - நானிலம் அலைந்து திரிவேனே
உலகமெல்லாம் அலைந்து திரிகின்றேனே. - நாகம் அணிகின்ற நாதநிலை கண்டு
குண்டலினியாக ஓடும் பிராணவாயு அடைகின்ற ஆறாவது நிலையை (ஆக்ஞாசக்ரமாகிய ஒளி வீசும் ஞான சதாசிவ நிலையைக்) கண்டு தரிசித்து** - நாடியதில் நின்று தொழுகேனே
விருப்புற்று அந்த நிலையிலே நின்று நான் தொழவில்லையே. - சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
அந்த ஞான ஒளியை உணர்கின்ற வாழ்வே சிவ வாழ்வு என்ற - சோகமது தந்து எனையாள்வாய்
( +அகம்) அதுவே நான் என்ற நிலை தந்து, என்னை ஆள்வாய். - சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சூரர் குலத்தை வென்று வெற்றியோடு போய் - சோலைமலை நின்ற பெருமாளே.
பழமுதிர்ச்சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.