தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன ...... தனதான
பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள்
நேசித் தாரவர் சித்தம ருட்டிகள்
பாரப் பூதர மொத்தத னத்திகள் ...... மிகவேதான்
பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள்
சீவிக் கோதிமு டித்தள கத்திகள்
பார்வைக் கேமய லைத்தரு துட்டிக ...... ளொழியாத
மாசுற் றேறிய பித்தளை யிற்பணி
நீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள்
மார்பிற் காதினி லிட்டபி லுக்கிகள் ...... அதிமோக
வாய்வித் தாரமு ரைக்கும பத்திகள்
நேசித் தாரையு மெத்திவ டிப்பவர்
மாயைக் கேமனம் வைத்தத னுட்டின ...... மலைவேனோ
தேசிக் கானக முற்றதி னைப்புன
மேவிக் காவல்க வட்கல்சு ழற்றுவள்
சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள் ...... மணவாளா
தேடிப் பாடிய சொற்புல வர்க்கித
மாகத் தூதுசெ லத்தரில் கற்பக
தேவர்க் காதிதி ருப்புக லிப்பதி ...... வருவோனே
ஆசித் தார்மன திற்புகு முத்தம
கூடற் கேவைகை யிற்கரை கட்டிட
ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி ...... படுவோனோ
டாரத் தோடகி லுற்றத ருக்குல
மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய
ஆதிச் சோலைம லைப்பதி யிற்றிகழ் ...... பெருமாளே.
- பாசத்தால் விலை கட்டிய பொட்டிகள் நேசித்தார் அவர்
சித்த(ம்) மருட்டிகள்
(தம்மிடம் வருபவர்கள் தம்மீது வைத்த) பாசத்தால் அதற்குரிய விலை பேசி முடிவு செய்யும் விலைமாதர்கள். தம்மை விரும்புவர்களின் மனதை மயக்குபவர்கள். - பாரப் பூதரம் ஒத்த தனத்திகள் மிகவே தான் பாவத்தால்
மெய் எடுத்திடு பட்டிகள்
கனத்த மலையை ஒத்த மார்பகத்தை உடையவர்கள். மிகவும் பாவ வினையின் காரணத்தால் உடலை எடுத்த வியாபாரிகள். - சீவிக் கோதி முடித்த அளகத்திகள் பார்வைக்கே மயலைத்
தரு துட்டிகள்
சீவி, ஆய்ந்து முடிந்து கொண்ட கூந்தலை உடையவர்கள். பார்வையாலேயே மோகத்தை எழுப்பும் துஷ்டர்கள். - ஒழியாத மாசு உற்று ஏறிய பித்தளையில் பணி நீறு இட்டே
ஒளி பற்ற விளக்கிகள் மார்பில் காதினில் இட்ட பிலுக்கிகள்
நீங்காத அழுக்கைப் பற்றி ஏறிய பித்தளை ஆபரணங்களை சாம்பலிட்டு பளபளப்பு உறும்படி விளக்கி வைத்துள்ளவர்கள். மார்பிலும் காதிலும் அந்த ஆபரணங்களை அணிந்து தளுக்கு செய்பவர்கள். - அதி மோக வாய் வித்தாரம் உரைக்கும் அபத்திகள் நேசித்து
யாரையும் எத்தி வடிப்பவர் மாயைக்கே மனம் வைத்து
அதனுள் தினம் அலைவேனோ
மிகவும் காமத்தைக் காட்டி, வாய் விரிவாகப் பேசும் பொய்யர்கள். நட்பு செய்து யாரையும் வஞ்சித்து வடிகட்டுபவர்கள். இத்தகையோரின் மாயைச் செயலுக்கே மனத்தைச் செலுத்தி அந்த மாயையுள் நாள் தோறும் அலைச்சல் உறுவேனோ? - தேசிக் கானகம் உற்ற தினைப் புனம் மேவிக் காவல் கவண்
கல் சுழற்றுவள் சீதப் பாத குறப் பெண் மகிழ்ச்சி கொள்
மணவாளா
(வள்ளிமலையின்) அழகிய காட்டில் இருந்த தினைப் புனத்துக்குச் சென்று காவல் இருந்து, (பறவைகளை விரட்ட) கவண் வீசி கல்லைச் சுழற்றுபவள், குளிர்ந்த திருவடியை உடையவள் ஆகிய குறப் பெண் வள்ளி மனம் மகிழும் கணவனே, - தேடிப் பாடிய சொல் புலவர்க்கு இதமாகத் தூது செல் அத்தர்
இல் கற்பக தேவர்க்கு ஆதி திருப் புகலிப் பதி வருவோனே
ஆசித்தார் மனதில் புகும் உத்தம
(தலங்கள் தோறும்) தேடிச் சென்று பாடிய சொல் வன்மை படைத்த புலவராகிய சுந்தரருக்கு இன்பம் தர (பரவை நாச்சியாரிடம்) தூதாகச் சென்ற தந்தை சிவபெருமான் பெற்ற கற்பகமே, தேவர்களுக்கு முதல்வனே, சீகாழியில் திருஞானசம்பந்தராக அவதரித்தவனே, விரும்பி வாழ்த்துவோருடைய உள்ளத்தில் புகும் உத்தமனே, - கூடற்கே வைகையில் கரை கட்டிட ஆள் ஒப்பாய் உதிர்
பிட்டு அமுதுக்கு அடி படுவோன் ஓடு
மதுரையில் வைகையில் (வெள்ளம் வர) அணை கட்ட கூலி ஆளாக ஒப்புக் கொண்டு உதிர்ந்த பிட்டமுதுக்காக (பிரம்பினால்) அடி பட்ட சொக்கநாதரோடு, - ஆரத்தோடு அகில் உற்ற தருக் குல மேகத்தோடு ஒருமித்து
நெருக்கிய ஆதிச் சோலை மலைப் பதியில் திகழ்
பெருமாளே.
சந்தன மரமும் அகில் மரமும் உள்ள மரக் கூட்டங்கள் மேகம் வரை உயர வளர்ந்து சம்பந்தப்பட்டு நெருங்கிய பழைய பழமுதிர்ச்சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.