திருப்புகழ் 1316 துடிகொள் நோய் (பழமுதிர்ச்சோலை)

தனன தான தான தத்த
தனன தான தான தத்த
தனன தான தான தத்த ...... தனதான
துடிகொ  ணோய்க  ளோடு  வற்றி 
தருண  மேனி  கோழை  துற்ற 
இரும  லீளை  வாத  பித்த  ......  மணுகாமல் 
துறைக  ளோடு  வாழ்வு  விட்டு 
உலக  நூல்கள்  வாதை  யற்று 
சுகமு  ளாநு  பூதி  பெற்று  ......  மகிழாமே 
உடல்செய்  கோர  பாழ்வ  யிற்றை 
நிதமு  மூணி  னாலு  யர்த்தி 
யுயிரி  னீடு  யோக  சித்தி  ......  பெறலாமே 
உருவி  லாத  பாழில்  வெட்ட 
வெளியி  லாடு  நாத  நிர்த்த 
உனது  ஞான  பாத  பத்ம  ......  முறுவேனோ 
கடிது  லாவு  வாயு  பெற்ற 
மகனும்  வாலி  சேயு  மிக்க 
மலைகள்  போட  ஆழி  கட்டி  ......  யிகலூர்போய்க் 
களமு  றானை  தேர்நு  றுக்கி 
தலைக  ளாறு  நாலு  பெற்ற 
அவனை  வாளி  யால  டத்தன்  ......  மருகோனே 
முடுகு  வீர  சூர  பத்மர் 
தலையின்  மூளை  நீறு  பட்டு 
முடிவ  தாக  ஆடு  நிர்த்த  ......  மயில்வீரா 
முநிவர்  தேவர்  ஞான  முற்ற 
புநித  சோலை  மாமலைக்குள் 
முருக  வேல  த்யாகர்  பெற்ற  ......  பெருமாளே. 
  • துடிகொள் நோய்களோடு வற்றி
    துடிதுடிக்கச் செய்கின்ற நோய்களால் உடல் வற்றிப் போய்,
  • தருண மேனி கோழை துற்ற
    இளமையாக இருந்த மேனியில் கபமும் கோழையும் மிகுந்து,
  • இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல்
    இருமலும், காச இழுப்பும், வாதமும், பித்தமும் என்னை அணுகாதபடி,
  • துறைகளோடு வாழ்வு விட்டு
    இல்லறம், துறவறம் என்ற வகைப்படும் இந்த வாழ்வை விட்டு,
  • உலக நூல்கள் வாதை யற்று
    உலகிலுள்ள சாத்திர நூல்களைக் கற்க வேண்டிய வேதனை நீங்கி,
  • சுகமுள அநுபூதி பெற்று மகிழாமே
    சுகத்தைத் தரும் சுய அனுபவம் அடைந்து மகிழாமல்,
  • உடல்செய் கோர பாழ்வயிற்றை
    உடலை வளர்க்கும் கோரமான பாழும் வயிற்றுக்கு
  • நிதமும் ஊணினால் உயர்த்தி
    நாள்தோறும் உணவு வகைகளைத் தந்து உடலைக் கொழுக்கச் செய்து,
  • உயிரி னீடு யோக சித்தி பெறலாமே
    வெறும் ஆயுளை நீட்டிக்கும் யோக சித்தியைப் பெறலாமோ?
  • உருவிலாத பாழில்
    உருவம் கடந்த பாழ்வெளியில்
  • வெட்ட வெளியிலாடு நாத நிர்த்த
    ஆகாயமாகிய வெட்டவெளியில் இசையுடன் ஆடுகின்ற நடனனே,
  • உனது ஞான பாத பத்மம் உறுவேனோ
    உனது கூத்தாடும் ஞான மயமான திருவடித் தாமரையை நான் அடைவேனோ?
  • கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு
    வேகமாகத் தாவ வல்லவனும், வாயு பெற்ற மகனுமான அநுமனும், வாலியின் மகன் அங்கதனும்
  • மிக்க மலைகள் போட ஆழி கட்டி
    நிரம்ப மலைகளைக் கடலின் மீது போட்டுக் கட்டிய அணைவழியாக
  • இகலூர்போய்க் களமுற ஆனை தேர்நுறுக்கி
    பகைவனது ஊராம் இலங்கையை அடைந்து, போர்க்களத்தில் யானைப்படையையும், தேர்ப்படையையும் தூளாக்கி,
  • தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை
    பத்துத் தலைகள் கொண்ட ராவணனை
  • வாளியால் அடு அத்தன்மருகோனே
    அம்பினால் கொன்ற அண்ணல் ராமனின் மருகனே,
  • முடுகு வீர சூர பத்மர்
    வேகமாக எதிர்த்துவந்த வீரர்களான சூரன், பத்மன், சிங்கமுகன், தாரகாசுரன்* ஆகியோரின்
  • தலையின் மூளை நீறு பட்டு முடிவதாக
    தலைகளில் உள்ள மூளைகள் சிதறித் தூளாகி முடிவுபெற,
  • ஆடு நிர்த்த மயில்வீரா
    (துடிக் கூத்து) நடனம் ஆடிய மயிலின் மீதமர்ந்த வீரனே,
  • முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள்
    முநிவர்களும், தேவர்களும் ஞானம் அடைந்த பரிசுத்தமான சோலை மாமலைக்குள் (பழமுதிர்ச்சோலைக்குள்**) வீற்றிருக்கும்
  • முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே.
    வேல் முருகனே, தியாகமூர்த்தியாம் சிவபிரான் ஈன்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com