தானதத்த தான தனாதனா தன
தானதத்த தான தனாதனா தன
தானதத்த தான தனாதனா தன ...... தனதானா
சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென
நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென
சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென ...... வருமானார்
சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களு
நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு
தேடியொக்க வாடி யையோ வையோ வென ...... மடமாதர்
மார்படைத்த கோடு பளீர் பளீ ரென
ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென
மாமசக்கி லாசை யுளோ முளோ மென ...... நினைவோடி
வாடைபற்று வேளை யடா வடா வென
நீமயக்க மேது சொலாய் சொலா யென
வாரம்வைத்த பாத மிதோ இதோ என ...... அருள்வாயே
பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்
கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்
பானிறக்க ணேசர் குவா குவா கனர் ...... இளையோனே
பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை
மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு
பாசமற்ற வேத குரூ குரூ பர ...... குமரேசா
போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென
நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென
போயறுத்த போது குபீர் குபீ ரென ...... வெகுசோரி
பூமியுக்க வீசு குகா குகா திகழ்
சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள்
பூணியிச்சை யாறு புயா புயா றுள ...... பெருமாளே.
- சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல் என
அழகு மிக்க உடல் பசுமையான குளிர்ந்த நிறத்துடன் விளங்க, - நூபுரத்தின் ஓசை கலீர் கலீர் என
கால் சிலம்பின் ஓசை கலீர் கலீர் என்று ஒலிக்க, - சேர விட்ட தாள்கள் சிவேல் சிவேல் என வரு மானார்
இணைந்து செல்லும் பாதங்கள் செக்கச் செவேல் எனத் திகழ வருகின்ற விலைமாதர்கள் சிலரும், - சேகரத்தின் வாலை சிலோர் சிலோர்களு(ம்)
கூட்டங்களுக்குக் (கொடுப்பதற்காக) கட்டிளமைப் பருவத்து சில சில பெண்களும், - நூறு லக்ஷ கோடி மயால் மயால் கொடு
நூறு லக்ஷ கோடி அளவில் மிகப் பலத்த மோகத்தோடு - தேடி ஒக்க வாடி ஐயோ ஐயோ என மடமாதர்
தேடி வைத்துள்ள பொருள்கள் அவ்வளவையும் வாட்டமுற்று ஐயோ ஐயோ என்னும்படி (இழக்கச் செய்கின்ற) இளம் மாதர்களின் - மார்பு அடைத்த கோடு பளீர் பளீர் என
நெஞ்சம் எல்லாம் பரந்துள்ள மலை போன்ற மார்பகம் பளீர் பளீர் என்று ஒளி வீச, - ஏமலித்து என் ஆவி பகீர் பகீர் என
அதைக் கண்டு மனக் கலக்கம் உற்று என் உயிர் பகீர் பகீர் எனப் பதைக்க, - மா மசக்கில் ஆசை உளோம் உளோம் என நினைவு ஓடி
அம்மாதர்களின் பெரிய மயக்கத்தில் ஆசை உண்டு, உண்டு என்று நினைவானது ஓடி, - வாடை பற்று வேளை அடா அடா என
(அந்தக் காமப் பித்தக்) காற்று என்னைப் பிடிக்கின்ற சமயத்தில் அடா அடா என்று என்னைக் கூவி அழைத்து, - நீ மயக்கம் ஏது சொலாய் சொலாய் என
உனக்கு என்ன மயக்கம் இது சொல்லுக, சொல்லுக என வற்புறுத்தி, - வாரம் வைத்த பாதம் இதோ இதோ என அருள்வாயே
நீ அன்பு வைத்த திருவடி இதோ, இதோ என்று கூறித் தந்து அருள் புரிவாயாக. - பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்
பாரதத்தை மேரு மலையின் வெளிப் புறத்தில் நன்கு விளங்கும்படி - கோடு ஒடித்த நாளில் வரை (இ)வரை (இ)பவர்
தமது தந்தத்தையே ஒடித்து அந்த நாளில் மலையில் எழுதிய யானை முகத்தவரும், - பா(னு) நிறக் கணேசர் கு ஆகு வாகனர் இளையோனே
சூரியனைப் போன்ற நிறத்தை உடைய கணபதியும், சிறிய மூஞ்சூறு வாகனத்தவரும் ஆகிய விநாயகருக்குத் தம்பியே, - பாடல் முக்ய மாது தமீழ் தமீழ் இறை
பாக்கள் சிறப்புடனும் அழகுடனும் உள்ள தமிழை, தமிழ்க் கடவுளாய் நின்று, - மா முநிக்கு காதில் உணார் உணார் விடு
சிறந்த அகத்திய முனிவருக்கு, செவியில் நன்கு ஆராய்ந்து உபதேசம் செய்த, - பாசம் அற்ற வேத குரூ குரூபர குமரேசா
இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய வேத குருபரனாகிய குமரேசனே, - போர் மிகுத்த சூரன் விடோம் விடோம் என
போரில் மிக்கவனாகிய சூரன் விட மாட்டேன் விடமாட்டேன் என்று, - நேர் எதிர்க்க வேலை படீர் படீர் என போய் அறுத்த போது
நேராக வந்து எதிர்த்தவுடன் வேலாயுதத்தை படீர் படீர் என்ற ஒலியுடன் (அந்த அசுரர்களைப்) போய் அறுத்த போது - குபீர் குபீர் என வெகு சோரி பூமி உக்க வீசு குகா குகா
ரத்தம் குபீர் குபீர் என்று பூமியில் சிந்த ஆயுதத்தை வீசிய குகனே, குகனே, - திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா
விளங்கும் சோலை மலையில் வீற்றீருக்கும் தெய்வமே, - தெய்வானை தோள் பூணி இச்சை ஆறு புயா புயா ஆறு உள
பெருமாளே.
தேவயானையின் தோளை அணைந்து அன்பு கொண்ட (6+6=12) பன்னிரண்டு புயங்களைக் கொண்ட பெருமாளே.