தனனாதன தானன தத்தன
தனனாதன தானன தத்தன
தனனாதன தானன தத்தன ...... தனதான
கருவாகியெ தாயுத ரத்தினி
லுருவாகவெ கால்கையு றுப்பொடு
கனிவாய்விழி நாசியு டற்செவி ...... நரைமாதர்
கையிலேவிழ வேகிய ணைத்துயி
லெனவேமிக மீதுது யிற்றிய
கருதாய்முலை யாரமு தத்தினி ...... லினிதாகித்
தருதாரமு மாகிய சுற்றமு
நலவாழ்வுநி லாதபொ ருட்பதி
சதமாமிது தானென வுற்றுனை ...... நினையாத
சதுராயுன தாளிணை யைத்தொழ
அறியாதநிர் மூடனை நிற்புகழ்
தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ ...... தொருநாளே
செருவாயெதி ராமசு ரத்திரள்
தலைமூளைக ளோடுநி ணத்தசை
திமிர்தாதுள பூதக ணத்தொடு ...... வருபேய்கள்
திகுதாவுண வாயுதி ரத்தினை
பலவாய்நரி யோடுகு டித்திட
சிலகூகைகள் தாமுந டித்திட ...... அடுதீரா
அருமாமறை யோர்கள்து தித்திடு
புகர்வாரண மாதுத னைத்திகழ்
அளிசேர்குழல் மேவுகு றத்தியை ...... அணைவோனே
அழகானபொன் மேடையு யர்த்திடு
முகில்தாவிய சோலைவி யப்புறு
அலையாமலை மேவிய பத்தர்கள் ...... பெருமாளே.
- கருவாகியெ தாய் உதரத்தினில்
கருவாய் அமைந்து தாயின் வயிற்றினில் - உருவாகவெ கால்கை உறுப்பொடு
உருவம் பெற்று, கால் கை என்ற உறுப்புக்களுடன் - கனிவாய்விழி நாசி உடற்செவி
இனிய வாய், கண்கள், மூக்கு, உடல், செவி என்ற அங்கங்களுடன் - நரைமாதர் கையிலேவிழ ஏகி
மருத்துவச்சியின் கைகளிலே விழும்படியாக பிறந்து வந்து, - அணைத்துயிலெனவே மிக மீது துயிற்றிய
படுக்கையில் படுத்துக்கொள் என்று மிகவும் பாராட்டித் தூங்கச்செய்த, - கருது ஆய்முலை யாரமுதத்தினில் இனிதாகி
அக்கரையோடு கவனிக்கும் தாயின் முலையில் நிறைந்த அமுதம் போன்ற பாலைப் பருகி இனியனாக வளர்ந்து, - தருதாரமும் ஆகிய சுற்றமு
தனக்கென்று வாய்த்த மனைவி, உடன் அமைந்த உறவினர்கள், - நலவாழ்வு நிலாதபொருள்பதி
நல்ல வாழ்வு, நிலைத்து நிற்காத செல்வம், ஊர், - சதமாமிது தானெனவுற்று
இவையெல்லாம் நிலைத்து நிற்கும் எனக் கருதி, - உனைநினையாத சதுராய்
உன்னை நினைத்துப் பார்க்காத சாமர்த்தியம் உடையவனாய், - உன தாளிணையைத்தொழ அறியாதநிர் மூடனை
உன்னிரு பாதங்களைத் தொழ அறியாத முழு மூடனாகிய என்னை, - நிற்புகழ்தனையோதி மெய்ஞ் ஞானமுறச் செய்வதொரு
நாளே
உன் புகழை ஓதி உண்மை ஞானத்தை அடையச்செய்யும் நாள் ஒன்று உண்டாகுமோ? - செருவாயெதிராம் அசுரத்திரள்
போர்க்களத்தில் எதிர்த்துவந்த அசுரர் கூட்டங்களின் - தலைமூளைகளோடு நிணத்தசை
தலை, மூளை, சதை, இறைச்சி இவைகளை - திமிர்தாதுள பூதக ணத்தொடு வருபேய்கள்
தேகக் கொழுப்பும் சத்துத் தாதுக்களும் உள்ள பூதகணங்களுடன் வருகின்ற பேய்கள் - திகுதாவுணவாய்
திகுதிகுவென்று உணவாக உண்ண, - உதிரத்தினை பலவாய்நரி யோடுகு டித்திட
பெருகும் ரத்தத்தை வெகுவாக வந்த நரிகள் குடித்திட, - சிலகூகைகள் தாமுநடித்திட அடுதீரா
சில கோட்டான்கள் தாமும் அங்கு நடனமாட, போர் செய்த தீரனே, - அருமாமறையோர்கள்துதித்திடு
அரிய சிறந்த வேதநெறியாளர்கள் துதித்துப் போற்றுகின்ற, - புகர்வாரண மாதுதனை
யானை வளர்த்த மகள், அழகிய தேவயானைத் தேவியையும், - திகழ் அளிசேர்குழல் மேவுகுறத்தியை அணைவோனே
விளங்கும் வண்டுகள் (பூவிலுள்ள தேனுக்காக) மொய்க்கும் கூந்தலை உடைய குறத்தி வள்ளியையும் தழுவுகின்றவனே, - அழகானபொன் மேடையுயர்த்திடு
அழகிய பொன்மயமான மாடங்களின் உச்சியில் தங்கும் - முகில்தாவிய சோலை
மேகங்களைத் தொடும் உயரமான சோலைகளும், - வியப்புறு அலையாமலை மேவிய பத்தர்கள் பெருமாளே.
அற்புதமான, சலனமற்ற பழமுதிர்ச்சோலை* என்னும் மலையில் வீற்றிருப்பவனே, அன்பர்கள் போற்றுகின்ற பெருமாளே.