திருப்புகழ் 1313 ஆசை நாலுசதுர (பழமுதிர்ச்சோலை)

தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன ...... தந்ததான
ஆசை  நாலுசது  ரக்கமல  முற்றினொளி 
வீசி  யோடியிரு  பக்கமொடு  றச்செல்வளி 
ஆவல்  கூரமண்மு  தற்சலச  பொற்சபையு  ......  மிந்துவாகை 
ஆர  மூணுபதி  யிற்கொளநி  றுத்திவெளி 
யாரு  சோதிநுறு  பத்தினுட  னெட்டுஇத 
ழாகி  யேழுமள  விட்டருண  விற்பதியின்  ......  விந்துநாத 
ஓசை  சாலுமொரு  சத்தமதி  கப்படிக 
மோடு  கூடியொரு  மித்தமுத  சித்தியொடு 
மோது  வேதசர  சத்தியடி  யுற்றதிரு  ......  நந்தியூடே 
ஊமை  யேனையொளிர்  வித்துனது  முத்திபெற 
மூல  வாசல்வெளி  விட்டுனது  ரத்திலொளிர் 
யோக  பேதவகை  யெட்டுமிதி  லொட்டும்வகை  ......  யின்றுதாராய் 
வாசி  வாணிகனெ  னக்குதிரை  விற்றுமகிழ் 
வாத  வூரனடி  மைக்கொளுக்ரு  பைக்கடவுள் 
மாழை  ரூபன்முக  மத்திகைவி  தத்தருண  ......  செங்கையாளி 
வாகு  பாதியுறை  சத்திகவு  ரிக்குதலை 
வாயின்  மாதுதுகிர்  பச்சைவடி  விச்சிவையென் 
மாசு  சேரெழுபி  றப்பையும  றுத்தவுமை  ......  தந்தவாழ்வே 
காசி  ராமெசுரம்  ரத்நகிரி  சர்ப்பகிரி 
ஆரூர்  வேலுர்  தெவுர்  கச்சிமது  ரைப்பறியல் 
காவை  மூதுரரு  ணக்கிரிதி  ருத்தணியல்  ......  செந்தில்நாகை 
காழி  வேளுர்பழ  நிக்கிரி  குறுக்கைதிரு 
நாவ  லூர்திருவெ  ணெய்ப்பதியின்  மிக்கதிகழ் 
காதல்  சோலைவளர்  வெற்பிலுறை  முத்தர்புகழ்  ......  தம்பிரானே. 
  • ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி வீசி
    திக்குகள் நான்கு பக்கங்களாகக் கொண்ட சதுரமான மூலாதாரக் கமலத்தில் பொருந்தி இனிய ஒளி வீசிட,
  • ஓடி இரு பக்கமொடு உற செல் வளி
    இரண்டு பக்கங்களிலும் பொருந்தி (இடை கலை, பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியாக) ஓடுகின்ற பிராண வாயு*
  • ஆவல் கூர மண் முதல் சலசம்
    விருப்பம் மிக்கெழ சுவாதிஷ்டான** (கொப்பூழ்) முதல் ஆக்கினை (புருவநடு) ஈறாக உள்ள ஐவகைக் கமலங்களிலும் ஓட வைத்து,
  • பொன் சபையும் இந்து வாகை ஆர
    (தில்லையில் நடனம் செய்யும் நடராஜரின்) கனக சபையும் சந்திர காந்தியால் நிரம்பி விளங்க,
  • மூணு பதியில் கொள நிறுத்தி
    மூன்று (அக்கினி, ஆதித்த, சந்திர) மண்டங்களிலும் பொருந்த நிறுத்தி,
  • வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி
    வெளிப்படும் சோதியான ஆயிரத்து எட்டு இதழோடு கூடிய,
  • ஏழும் அளவு இட்டு
    (பிரமரந்திரம் - பிந்து மண்டலம், ஹஸ்ராரம் - அதனுடன் கூடிய ஆறு ஆதாரங்களுடன் மொத்தம்) ஏழு இடங்களையும் கண்டறிந்து,
  • அருண விற்பதியில்
    சிவந்த ஒளியுடன் கூடிய பன்னிரண்டாம் (துவாதசாந்த) ஆதாரத்தில்,
  • விந்து நாத ஓசை சாலும்
    சிவசக்தி ஐக்கிய நாத ஓசை நிறைந்துள்ள
  • ஒரு சத்தம் அதிகப் படிகமோடு கூடி
    ஒப்பற்ற சத்தம் மிகுந்த பளிங்கு போன்ற காட்சியுடன் கூடியதாய்,
  • ஒருமித்து அமுத சித்தியொடும்
    ஒன்று சேர்ந்து மதி மண்டலத்தினின்றும் பெருகிப் பாயும் கலா அமிர்தப் பேற்றுடன்,
  • ஓது வேத சர சத்தி அடி உற்ற திரு நந்தி ஊடே
    புகழ்ந்து சொல்லப்படும் வேத வாசி சக்திக்கு ஆதாரமாக உள்ள திரு நந்தி ஒளிக்குள்ளே,
  • ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்தி பெற
    ஊமையாகிய என்னை விளங்க வைத்து நீ அருளும் முத்தியைப் பெற,
  • மூல வாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர்
    பிரமரந்திரம் எனப்படும் மூலவாசல் வெளியிட்டு விளங்க, உனது அருளாற்றலால் ஒளிர்கின்ற
  • யோக பேதவகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய்
    யோக விதங்கள்*** எட்டும் இதில் பொருந்தும் வகையை நான் அறியுமாறு இன்று தந்தருளுக.
  • வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ்
    குதிரை வியாபாரி என வந்து குதிரைகளை விற்று மகிழ்ச்சிகொண்ட
  • வாத ஊரன் அடிமை கொளு க்ருபை கடவுள்
    திருவாதவூரராகிய மாணிக்க வாசகரை அடிமையாகக் கொண்ட கிருபாகர மூர்த்தி,
  • மாழை ரூபன் முக மத்திகை விதத்து அருண செம் கையாளி
    பொன் உருவத்தினன், குதிரைச் சேணம், சவுக்கு வகைகளைப் பிடித்த செவ்விய திருக்கையைக் கொண்டவனாகிய சிவபெருமானுடைய
  • வாகு பாதி உறை சத்தி கவுரி குதலை வாயின் மாது
    இடது பக்கத்தில் உறைகின்ற சக்தி, கெளரி, மழலைச் சொல் பேசும் மாது,
  • துகிர் பச்சை வடிவி சிவை
    பவளமும் பச்சை நிறமும் கொண்ட வடிவினள்,
  • என் மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை தந்த வாழ்வே
    என்னுடைய குற்றம் நிறைந்த ஏழு பிறப்புகளையும் அறுத்த உமா தேவியார் ஈன்ற செல்வமே,
  • காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி
    காசி, இராமேசுரம், திருவாட்போக்கி, திருச்செங்கோடு,
  • ஆரூர் வேலூர் தெவூர் கச்சி மதுரை பறியல்
    திருவாரூர், வேலூர், தேவூர், காஞ்சீபுரம், மதுரை, திருப்பறியல்,
  • காவை மூதூர் அருண கிரி திருத்தணியல் செந்தில் நாகை
    திருவானைக்கா, திருப்புனைவாசல், திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செந்தூர், நாகப்பட்டினம்,
  • காழி வேளூர் பழநிக்கிரி குறுக்கை
    சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் (வேளூர்), பழநிமலை, திருக்குறுக்கை,
  • திரு நாவலூர் திருவெ(ண்)ணெய் பதியில் மிக்க திகழ்
    திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர் முதலிய தலங்களில் விளங்கும், (மேலும்)
  • காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர் புகழ் தம்பிரானே.
    உனக்கு விருப்பமான சோலை மலையிலும் உறைகின்ற ஜீவன் முக்தர்கள் புகழ்கின்ற தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com