தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
தானதன தந்த தந்த ...... தனதான
வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து
மால்வரை யசைந்த நங்கன் ...... முடிசாய
வாளகிரி யண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்து
மாதவ மறந்து றந்து ...... நிலைபேரப்
பூரண குடங்க டிந்து சீதகள பம்பு னைந்து
பூசலை விரும்பு கொங்கை ...... மடவார்தம்
போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து
பூசனைசெய் தொண்ட னென்ப ...... தொருநாளே
ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள்
ஆகுதி யிடங்கள் பொங்கு ...... நிறைவீதி
ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
யாரமர வந்த லம்பு ...... துறைசேரத்
தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற
சூழ்மணிபொன் மண்ட பங்கள் ...... ரவிபோலச்
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்து கந்த ...... பெருமாளே.
- வாரண முகம் கிழிந்து வீழவும் அரும்பு அலர்ந்து
(இவர்களது மார்பகங்களை) யானைக்கு ஒப்பிடலாம் என்றால், அதன் முகம் ஒரு காலத்தில் (சிவபெருமானால்) கிழிபட்டு விழுந்தது. அரும்பை ஒப்பிடலாம் என்றால் அது மலர்ந்து வாடுகின்றது. - மால் வரை அசைந்து அநங்கன் முடி சாய
பெரிய மலையாகிய கயிலையை ஒப்பிடலாம் என்றால் அது (ராவணனால்) அசைக்கப்பட்டது. மன்மதனுடைய கிரீடத்துக்கு ஒப்பிடலாம் என்றால் அது (சிவ பெருமான் எரித்த போது) சாய்ந்து விழுந்தது. - வாள கிரி அண்டர் அண்ட கோளம் உற நின்று எழுந்து
சக்ர வாள கிரி போல, தேவ லோகம் அண்ட கோளம் இவைகளை எட்டும்படி நிமிர்ந்து எழுந்து, - மா தவம் அறம் துறந்து நிலை பேரப் பூரண குடம் கடிந்து
சீத களபம் புனைந்து
பெரிய தவசிகளும் தரும நெறியைக் கைவிட்டு நிலை குலைய, பூரணமாகத் திரண்ட குடத்தையும் வென்று, குளிர்ந்த சந்தனக் கலவையை அணிந்து, - பூசலை விரும்பு(ம்) கொங்கை மடவார் தம் போக சயனம்
தவிர்ந்து
காமப் போரை விரும்பும் மார்பகங்களை உடைய விலைமாதர்களின் இன்பப் படுக்கையை விட்டு நீங்கி, - உன் ஆடக பதம் பணிந்து பூசனை செய் தொண்டன் என்பது
ஒரு நாளே
உனது கூத்துக்கு இயன்ற திருவடியை வணங்கி, அதைப் பூஜிக்கும் தொண்டன் இவன் என்று கூறும்படியான ஒரு நாள் வருமோ? - ஆரண(ம்) முழங்குகின்ற ஆயிரம் மடம் தவங்கள் ஆகுதி
இடங்கள் பொங்கு நிறை வீதி
வேதங்கள் முழங்குகின்ற ஆயிரக் கணக்கான மடங்களும், தவங்கள் வேள்விச் சாலைகள் விளங்குகின்ற நிறைவான வீதிகளும், - ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கு(ம்) கங்கை*
ஆர அமர வந்து அலம்பு துறை சேர
பல கிளைகளாகப் பரந்து வரும், நூபுரம் ஒலிக்கும் ஆகாய கங்கையாகிய சிலம்பாறு அமைதியாக வந்து ததும்பி ஒலிக்கும் படித்துறைகளும் பொருந்த, - தோரணம் அலங்கு துங்க கோபுர(ம்) நெருங்குகின்ற சூழ்
மணி பொன் மண்டபங்கள்
தோரணங்கள் அசையும் உயர்ந்த கோபுரங்களும், நெருங்கி நின்று சூழ்ந்துள்ள முத்து மணிகள் பதித்த பொலிவுள்ள மண்டபங்களும், - ரவி போல சோதியின் மிகுந்த செம் பொன் மாளிகை
விளங்குகின்ற சோலை மலை வந்து உகந்த பெருமாளே.
சூரியனைப் போல சோதி மிகுந்த அழகிய பொன் மாளிகைகளும் விளங்கும் சோலை மலையில் வந்து மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே.