திருப்புகழ் 1311 வீர மதன் நூல் (பழமுதிர்ச்சோலை)

தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
வீரமத  னூல்வி  ளம்பு  போகமட  மாதர்  தங்கள் 
வேல்விழியி  னான்ம  யங்கி  ......  புவிமீதே 
வீசுகையி  னாலி  தங்கள்  பேசுமவர்  வாயி  தஞ்சொல் 
வேலைசெய்து  மால்மி  குந்து  ......  விரகாகிப் 
பாரவச  மான  வங்க  ணீடுபொருள்  போன  பின்பு 
பாதகனு  மாகி  நின்று  ......  பதையாமல் 
பாகம்வர  சேர  அன்பு  நீபமலர்  சூடு  தண்டை 
பாதமலர்  நாடி  யென்று  ......  பணிவேனோ 
பூரணம  தான  திங்கள்  சூடுமர  னாரி  டங்கொள் 
பூவையரு  ளால்வ  ளர்ந்த  ......  முருகோனே 
பூவுலகெ  லாம  டங்க  வோரடியி  னால  ளந்த 
பூவைவடி  வானு  கந்த  ......  மருகோனே 
சூரர்கிளை  யேத  டிந்து  பாரமுடி  யேய  ரிந்து 
தூள்கள்பட  நீறு  கண்ட  ......  வடிவேலா 
சோலைதனி  லேப  றந்து  லாவுமயி  லேறி  வந்து 
சோலைமலை  மேல  மர்ந்த  ......  பெருமாளே. 
  • வீர மதன் நூல் விளம்பும் போக மட மாதர் தங்கள் வேல் விழியினால் மயங்கி
    வீரம் வாய்ந்த மன்மதனுடைய காம சாஸ்திர நூலில் சொல்லப்பட்ட போகத்தைத் தரும் அழகிய மாதர்களுடைய வேல் போன்ற கூரிய கண்களால் மயக்கம் அடைந்து,
  • புவி மீதே வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம் சொல் வேலை செய்து
    இப்பூமியின் மேல் அன்பான பேச்சுக்களைப் பேசும் அப் பொது மகளிர் வாயினின்றும் பிறக்கும் இன்பச் சொற்களுக்கு இணங்கி அவர்கள் இட்ட வேலைகளை கைகளை வீசிச் செய்து,
  • மால் மிகுந்து விரகாகிப் பார வசமான அங்கண் நீடு பொருள் போன பின்பு பாதகனுமாகி நின்று பதையாமல்
    அவர்கள் மேல் மையல் மிகுந்து மோகாவேசனனாகி அங்கு மிக்கிருந்த பொருள் யாவும் செலவழித்த பின்னர் பாதகனாய் நின்று தவிக்காமல்,
  • பாகம் வர சேர அன்பு நீப மலர் சூடு தண்டை பாத மலர் நாடி என்று பணிவேனோ
    மனப் பக்குவ நிலை வருவதற்கு, கடப்ப மலர் சூடியுள்ளதும், தண்டை அணிந்ததுமான திருவடி மலரை மிக்க அன்பினால் விரும்பித் தேடி என்றைக்கு உன்னைப் பணிவேனா?
  • பூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள் பூவை அருளால் வளர்ந்த முருகோனே
    என்றும் முழுமையாக இருக்கும் சந்திரனை சடையில் அணிந்துள்ள சிவபெருமானின் இடது பாகத்தைக் கொண்ட பார்வதியின் திருவருளால் வளர்ந்த குழந்தை முருகனே,
  • பூ உலகு எலாம் அடங்க ஓர் அடியினால் அளந்த பூவை வடிவான் உகந்த மருகோனே
    மண்ணுலகம் எல்லாம் முழுமையாக ஓரடியால் அளந்த காயாம்பூ வண்ணனாகிய திருமால் மகிழும் மருகனே,
  • சூரர் கிளையே தடிந்து பார முடியே அரிந்து தூள்கள் பட நீறு கண்ட வடிவேலா
    சூரர்கள் கூட்டங்களை அழித்து அவர்களுடைய கனத்த முடிகளை வெட்டிப் பொடியாகும்படி சாம்பலாகக் கண்ட கூரிய வேலனே,
  • சோலை தனிலே பறந்து உலாவு மயில் ஏறி வந்து சோலை மலை மேல் அமர்ந்த பெருமாளே.
    சோலையில் பறந்து உலாவுகின்ற மயிலின் மேல் ஏறி வந்து பழமுதிர்ச்சோலை மலை மேல் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com