திருப்புகழ் 1310 சீலமுள தாயர் (பழமுதிர்ச்சோலை)

தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
சீலமுள  தாயர்  தந்தை  மாதுமனை  யான  மைந்தர் 
சேருபொரு  ளாசை  நெஞ்சு  ......  தடுமாறித் 
தீமையுறு  மாயை  கொண்டு  வாழ்வுசத  மாமி  தென்று 
தேடினது  போக  என்று  ......  தெருவூடே 
வாலவய  தான  கொங்கை  மேருநுத  லான  திங்கள் 
மாதர்மய  லோடு  சிந்தை  ......  மெலியாமல் 
வாழுமயில்  மீது  வந்து  தாளிணைகள்  தாழு  மென்றன் 
மாயவினை  தீர  அன்பு  ......  புரிவாயே 
சேலவள  நாட  னங்கள்  ஆரவயல்  சூழு  மிஞ்சி 
சேணிலவு  தாவ  செம்பொன்  ......  மணிமேடை 
சேருமம  ரேசர்  தங்க  ளூரிதென  வாழ்வு  கந்த 
தீரமிகு  சூரை  வென்ற  ......  திறல்வீரா 
ஆலவிட  மேவு  கண்டர்  கோலமுட  னீடு  மன்று 
ளாடல்புரி  யீசர்  தந்தை  ......  களிகூர 
ஆனமொழி  யேப  கர்ந்து  சோலைமலை  மேவு  கந்த 
ஆதிமுத  லாக  வந்த  ......  பெருமாளே. 
  • சீலமுளதாயர் தந்தை மாதுமனையான மைந்தர்
    நற்குணவதியான தாய், தகப்பன், மனைவி, வீடு, மக்கள்,
  • சேருபொருள் ஆசை நெஞ்சு தடுமாறி
    சம்பாதித்த பொருள் இவைகளின் மேல் ஆசையால் மனம் தடுமாற்றத்தை அடைந்து,
  • தீமையுறு மாயை கொண்டு
    கெடுதலைத் தருவதான மயக்கத்தில் வீழ்ந்து,
  • வாழ்வுசத மாமி தென்று
    இந்த வாழ்வே நிரந்தரமாக இருக்கும் என்று எண்ணி
  • தேடினது போக என்று
    தேடிச் சம்பாதித்த பொருள் அத்தனையும் தொலைந்து போகும்படியாக,
  • தெருவூடே வாலவய தான
    நடுத்தெருவில் இளம் வயதுள்ளவர்களாக,
  • கொங்கை மேரு நுதலான திங்கள்
    மார்பகம் மலைபோன்றும், நெற்றி பிறைச்சந்திரனைப் போலவும் உள்ள
  • மாதர்மய லோடு சிந்தை மெலியாமல்
    பொது மகளிரின் மீது மோகத்தால் அடியேனது மனம் நோகாமல்,
  • வாழுமயில் மீது வந்து
    என்றும் வாழ்கின்ற மயிலின் மிசை நீ வந்து
  • தாளிணைகள் தாழு மென்றன்
    உன் பாத கமலங்களில் பணிகின்ற எந்தன்
  • மாயவினை தீர அன்பு புரிவாயே
    மாயவினை அழியும்படியாக அருள் புரிவாயாக.
  • சேலவள நாடு அ(ன்)னங்கள் ஆர
    சேல் மீன்கள் மிகுந்த நாடு, அன்னங்கள் நிரம்பிய
  • வயல் சூழும் இஞ்சி
    வயல்கள் சூழ்ந்த மதில்கள்
  • சேணிலவு தாவ செம்பொன் மணிமேடை
    வானிலுள்ள நிலவை எட்டும் செம்பொன்னாலான மணிமேடைகள்
  • சேரும் அமரேசர் தங்கள் ஊரிதென வாழ்வு உகந்த
    இவையெல்லாம் கூடிய இந்திரபுரி போன்றது எங்கள் ஊர் என்று சொல்லும்படி மகிழ்ச்சியான வாழ்வு கொண்டிருந்த
  • தீரமிகு சூரை வென்ற திறல்வீரா
    தைரியம் மிகுந்த சூரனை வென்ற வலிமை மிக்க வீரனே,
  • ஆலவிட மேவு கண்டர்
    ஆலகால விஷத்தை உண்ட நீலத் தழும்பு உள்ள கண்டத்தை உடையவரும்,
  • கோலமுடன் நீடு மன்றுள் ஆடல்புரி
    நீண்ட கனகசபையில் அழகுடன் நடனம் புரிகின்றவரும் ஆகிய
  • ஈசர் தந்தை களிகூர
    பரமேசுவரனாம் உனது தந்தை மகிழ்ச்சி மிகவும் அடையும்படியாக
  • ஆனமொழியே பகர்ந்து
    சிறந்ததான உபதேச மொழியை உபதேசித்து
  • சோலைமலை மேவு கந்த
    பழமுதிர் சோலையில் வீற்றிருக்கும் கந்தனே,
  • ஆதிமுதலாக வந்த பெருமாளே.
    ஆதி முதல்வனாக வந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com