தானதன தான தந்த ...... தனதான
காரணம தாக வந்து ...... புவிமீதே
காலனணு காதி சைந்து ...... கதிகாண
நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத
ஞானநட மேபு ரிந்து ...... வருவாயே
ஆரமுத மான தந்தி ...... மணவாளா
ஆறுமுக மாறி ரண்டு ...... விழியோனே
சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே.
- காரணமதாக வந்து
ஊழ்வினையின் காரணமாக வந்து - புவிமீதே
இந்த பூமியில் பிறந்து, - காலனணுகாது
காலன் என்னை நெருங்காதபடிக்கு - இசைந்து கதிகாண
நீ மனம் பொருந்தி நான் நற்கதியை அடைய, - நாரணனும் வேதன் முன்பு தெரியாத
திருமாலும் பிரம்மாவும் முன்பு கண்டறியாத - ஞானநடமே புரிந்து வருவாயே
ஞான நடனத்தை ஆடி வருவாயாக. - ஆரமுத மான தந்தி மணவாளா
நிறைந்த அமுது போல் இனிய தேவயானையின் மணவாளனே, - ஆறுமுக மாறி ரண்டு விழியோனே
ஆறு திருமுகங்களையும், பன்னிரண்டு கண்களையும் உடையவனே, - சூரர்கிளை மாள
சூரர் கூட்டங்கள் இறக்கும்படியாக - வென்ற கதிர்வேலா
வெற்றி கொண்ட ஒளிமிக்க வேலனே, - சோலைமலை மேவி நின்ற பெருமாளே.
பழமுதிர்ச்சோலை மலையில் மேவி விளங்கும் பெருமாளே.