திருப்புகழ் · 1303வாரி மீதே (பொதுப்பாடல்கள்)

vArimeedhE

தானனா தானன ...... தந்ததான
வாரிமீ தேயெழு ...... திங்களாலே
மாரவே ளேவிய ...... அம்பினாலே
பாரெலா மேசிய ...... பண்பினாலே
பாவியே னாவிம ...... யங்கலாமோ
சூரனீள் மார்புதொ ...... ளைந்தவேலா
சோதியே தோகைய ...... மர்ந்தகோவே
மூரிமால் யானைம ...... ணந்தமார்பா
மூவர்தே வாதிகள் ...... தம்பிரானே.

பத உரை · word meanings

  • வாரிமீதேயெழு திங்களாலே
    கடலின் மீது உதிக்கின்ற சந்திரனாலே,
  • மாரவே ளேவிய அம்பினாலே
    மன்மதக் கடவுள் ஏவிய மலர் அம்புகளினாலே,
  • பாரெலாம் ஏசிய பண்பினாலே
    உலகிலுள்ள பெண்களெல்லாம் இகழ்ந்து ஏசிய செய்கையாலே,
  • பாவியேன் ஆவி மயங்கலாமோ
    (உன்னைப் பிரிந்த) பாவம் செய்த தலைவியாகிய நான் உயிர் போகும் நிலைக்கு வந்து மயங்கலாமோ?
  • சூரனீள் மார்பு தொளைந்த வேலா
    சூரனுடைய பெரும் மார்பைத் தொளைத்த வேலனே,
  • சோதியே தோகையமர்ந்த கோவே
    ஜோதியே, மயில் மீது வீற்றிருக்கும் அரசே,
  • மூரிமால் யானைமணந்தமார்பா
    பெருமையும், உன் மீது ஆசையும் கொண்ட தேவயானையை மணந்த திருமார்பா,
  • மூவர்தேவாதிகள் தம்பிரானே.
    மும்மூர்த்திகளுக்கும், தேவாதிகளுக்கும் தலைவனே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits