திருப்புகழ் 1304 வான் அப்பு (பொதுப்பாடல்கள்)

தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான
வானப்  புக்குப்  பற்றும  ருத்துக்  ......  கனல்மேவு 
மாயத்  தெற்றிப்  பொய்க்குடி  லொக்கப்  ......  பிறவாதே 
ஞானச்  சித்திச்  சித்திர  நித்தத்  ......  தமிழாலுன் 
நாமத்  தைக்கற்  றுப்புகழ்  கைக்குப்  ......  புரிவாயே 
கானக்  கொச்சைச்  சொற்குற  விக்குக்  ......  கடவோனே 
காதிக்  கொற்றப்  பொற்குல  வெற்பைப்  ......  பொரும்வேலா 
தேனைத்  தத்தச்  சுற்றிய  செச்சைத்  ......  தொடையோனே 
தேவச்  சொர்க்கச்  சக்கிர  வர்த்திப்  ......  பெருமாளே. 
  • வான் அப்புக் குப் பற்று மருத்துக் கனல் மேவு
    ஆகாயம், நீர், பூமி, ஆசை, காற்று, தீ ஆகியவை கலந்த
  • மாயத் தெற்றிப் பொய்க்குடில் ஒக்கப் பிறவாதே
    மாயக் கட்டடமான இந்தப் பொய்க் குடிசையாம் உடலோடு பிறக்காமல்,
  • ஞானச் சித்திச் சித்திர நித்தத் தமிழால்
    ஞானம் கைகூட, அழகியதும் அழியாததுமான தமிழ்ச் சொற்களால்
  • உன் நாமத்தைக் கற்றுப் புகழ்கைக்குப் புரிவாயே
    உன் திரு நாமத்தை நன்கு கற்றறிந்து (கந்தா, முருகா, குகா என்றெல்லாம் கூறி) புகழ்வதற்கு நீ அருள் புரிய வேண்டும்.
  • கானக் கொச்சைச் சொற்குற விக்குக் கடவோனே
    காட்டில் வாழ்ந்தவளும், திருந்தாத குதலைப் பேச்சைக் கொஞ்சிப் பேசுபவளும் ஆன குறப்பெண் வள்ளியை ஆட்கொள்ளக் கடமைப்பட்டவனே,
  • கொற்றப் பொற்குல வெற்பை காதிப் பொரும்வேலா
    வெற்றிச் சிறப்புடன் இருந்த தங்கமயமான குலகிரி கிரெளஞ்சமலையைக் கூறு செய்து அதனுடன் போரிட்ட வேலவனே,
  • தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் தொடையோனே
    வண்டுகளைத் தாவித் தாவிச் சுற்றச்செய்யும்படியான வெட்சி மலர் மாலையை அணிந்தவனே,
  • தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் பெருமாளே.
    தேவர்கள் வாழும் சொர்க்கத்தில் விளங்கும் சக்ரவர்த்திப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com