தனனத்த தத்த ...... தனதான
மனைமக்கள் சுற்ற ...... மெனுமாயா
வலையைக்க டக்க ...... அறியாதே
வினையிற்செ ருக்கி ...... யடிநாயேன்
விழலுக்கி றைத்து ...... விடலாமோ
சுனையைக்க லக்கி ...... விளையாடு
சொருபக்கு றத்தி ...... மணவாளா
தினநற்ச ரித்ர ...... முளதேவர்
சிறைவெட்டிவிட்ட ...... பெருமாளே.
- மனைமக்கள் சுற்றம் எனுமாயா வலையைக் கடக்க
அறியாதே
மனைவி, மக்கள், உறவினர் என்ற மாய வலையைவிட்டு வெளியேறத் தெரியாமல், - வினையிற்செ ருக்கி யடிநாயேன்
என் வினைகளிலே மகிழ்ச்சியும் கர்வமும் அடைந்த நாயினும் கீழான அடியேன், - விழலுக்கு இறைத்து விடலாமோ
வீணுக்குப் பயனில்லாமல் என் வாழ்நாளைக் கழித்திடுதல் நன்றோ? - சுனையைக்கலக்கி விளையாடு
சுனைக்குள் புகுந்து அதனைக் கலக்கி விளையாடும் - சொருபக்கு றத்தி மணவாளா
வடிவழகி வள்ளி என்ற குறத்தியின் மணவாளனே, - தினநற்ச ரித்ர முளதேவர்
நாள்தோறும் நல்ல வழியிலேயே செல்லும் தேவர்களின் - சிறைவெட்டி விட்ட பெருமாளே.
சிறையை நீக்கி அவர்களை மீட்ட பெருமாளே.