திருப்புகழ் · 1296நீலங்கொள் (பொதுப்பாடல்கள்)neelangkoL
தானந்த தானத்தம் ...... தனதான
Thiruppugazh Anbargal
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.
பத உரைword meanings
- நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீல நிறத்தைக் கொண்ட மேகத்தைப் போன்ற மயில் மேலே - நீவந்த வாழ்வைக்கண்டதனாலே
நீ எழுந்தருளிவந்த புறப்பாட்டுத் தரிசனத்தைக் கண்ட காரணத்தால் - மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும்
உன்மீது ஆசை கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம் மிக்க - மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே
மார்பில் தங்கி விளங்கும் மாலையைத் தந்து அருள்புரிவாயாக. - வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே
உன் வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே, - வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
வீரம் மிக்க சூரர்களின் குலத்துக்கே யமனாக விளங்கியவனே, - நாலந்த வேதத்தின் பொருளோனே
ரிக், யஜூர், சாம, அதர்வண என்ற நான்கு அழகிய வேதங்களின் பொருளாக விளங்கியவனே, - நானென்று மார்தட்டும் பெருமாளே.
எல்லா உயிர்களுக்கு உள்ளும் இருப்பவன் நான்தான் என்று பெருமை பாராட்டி மார்பினைத் தட்டிக் கொள்ளும் பெருமாளே.
குறிப்புகள் · notes
- இது அகத்துறையில் முருகனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் வைத்து எழுதிய பாடல்.
- This is a love song with Murugan as the NAyakA and the poet as the NAyaki.




