தத்தனத் தனனதத்த ...... தனதான
நித்தமுற் றுனைநினைத்து ...... மிகநாடி
நிட்டைபெற் றியல்கருத்தர் ...... துணையாக
நத்தியு தமதவத்தி ...... னெறியாலே
லக்யலக் கணநிருத்த ...... மருள்வாயே
வெற்றிவிக் ரமவரக்கர் ...... கிளைமாள
விட்டநத் துகரனுக்கு ...... மருகோனே
குற்றமற் றவருளத்தி ...... லுறைவோனே
குக்குடக் கொடிதரித்த ...... பெருமாளே.
- நித்தம் உற்றுனைநினைத்து மிகநாடி
தினமும் உன்னை மனத்தில் பொருத்தி நினைத்து மிகவும் விரும்பியும், - நிட்டைபெற்றியல்கருத்தர் துணையாக
தியானநிலை பெற்று வாழும் பெரியோரைத் துணையென்று - நத்தி உ(த்)தம தவத்தின் நெறியாலே
அவர்களை நாடியும், சிறந்த நல்லொழுக்கத்தை நான் பற்றிய பயனாக - லக்ய லக்கண நிருத்தம் அருள்வாயே
இலக்கியத்தில் (பரத சாஸ்திரத்தில்) சொல்லியபடியும், நிருத்த இலக்கணப்படியும் உனது நிருத்த தரிசனத்தை* நீ எனக்கு அருள்வாயாக. - வெற்றி விக்ரமவரக்கர் கிளைமாள விட்ட
வெற்றியும் பராக்கிரமும் கொண்டிருந்த அரக்கர் சுற்றத்தாருடன் இறக்கும்படிச் செய்த - நத்துகரனுக்கு மருகோனே
சக்ராயுதத்தைக் கரத்தில் ஏந்தியவனாகிய திருமாலுக்கு மருமகனே, - குற்றமற்றவர் உளத்தில் உறைவோனே
குற்றம் இல்லாத பெரியோர்களின் மனத்தில் விளங்குபவனே, - குக்குடக் கொடிதரித்த பெருமாளே.
சேவற்கொடியை ஏந்திய பெருமாளே.