தானதன தானனத் ...... தனதான
நாரியர்க ளாசையைக் ...... கருதாதே
நானுனிரு பாதபத் ...... மமுநாட
ஆரமுத மானசர்க் ...... கரைதேனே
ஆனஅநு பூதியைத் ...... தருவாயே
காரணம தானவுத் ...... தமசீலா
கானகுற மாதினைப் ...... புணர்வோனே
சூரர்கிளை தூளெழப் ...... பொரும்வேலா
தோகைமயில் வாகனப் ...... பெருமாளே.
- நாரியர்கள் ஆசையைக் கருதாதே நான் உன் இரு பாத
பத்மமும் நாட
பெண்கள் மீதுள்ள ஆசையை எண்ணாமல், நான் உனது இரண்டு தாமரைத் திருவடிகளை விரும்பித் தேட, - ஆர அமுதமான சர்க்கரை தேனே ஆன அநுபூதியைத்
தருவாயே
நிறைந்த அமுதம் என்று சொல்லும்படி, சர்க்கரை, தேன் என்னும்படியான இனிய அனுபவ ஞானத்தைத் தருவாயாக. - காரணம் அதான உத்தம சீலா
அனைத்துக்கும் காரணனாக (மூலப் பொருளாக) இருக்கும் உத்தம சீலனே, - கான குற மாதினைப் புணர்வோனே
காட்டில் வளர்ந்த குறப் பெண்ணாகிய வள்ளியை அணைந்தவனே, - சூரர் கிளை தூள் எழப் பொரும் வேலா
சூரனது சுற்றம் இறந்து தூளாகும்படி சண்டை செய்த வேலாயுதனே, - தோகை மயில் வாகனப் பெருமாளே.
அழகிய கலாபத்தை உடைய மயிலை வாகனமாகக் கொண்ட பெருமாளே.