திருப்புகழ் 1292 தேன் இயல் சொற் (பொதுப்பாடல்கள்)

தானதனத் ...... தனதான
தேனியல்சொற்  ......  கணிமாதர் 
சேவைதனைக்  ......  கருதாதே 
யானெனதற்  ......  றிடுபோதம் 
யானறிதற்  ......  கருள்வாயே 
வானவருக்  ......  கரசான 
வாசவனுக்  ......  கினியோனே 
ஆனைமுகற்  ......  கிளையோனே 
ஆறுமுகப்  ......  பெருமாளே. 
  • தேன் இயல் சொற்கு அணி மாதர் சேவை தனைக் கருதாதே
    தேனின் இனிமைத் தன்மையைக் கொண்ட, சொல்லழகு உடைய பெண்களுக்குப் பணிவிடை செய்வதை நான் சிந்தியாது,
  • யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே
    யான் எனது (அகங்காரம், மமகாரம்) என்னும் இரண்டு பாசங்களும் நீங்குகின்ற ஞானத்தை நான் உணர்ந்து அறிந்துகொள்ள அருள்வாயாக.
  • வானவருக்கு அரசான வாசவனுக்கு இனியோனே
    விண்ணோர்களுக்கு அரசனான இந்திரனுக்கு இனிய நண்பனே,
  • ஆனை முகற்கு இளையோனே
    யானை முகமுடைய கணபதிக்குத் தம்பியே,
  • ஆறு முகப் பெருமாளே.
    ஆறு முகமுடைய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com