திருப்புகழ் 1291 துள்ளு மதவேள் (பொதுப்பாடல்கள்)

தய்யதன தானத் ...... தனதான
துள்ளுமத  வேள்கைக்  ......  கணையாலே 
தொல்லைநெடு  நீலக்  ......  கடலாலே 
மெள்ளவரு  சோலைக்  ......  குயிலாலே 
மெய்யுருகு  மானைத்  ......  தழுவாயே 
தெள்ளுதமிழ்  பாடத்  ......  தெளிவோனே 
செய்யகும  ரேசத்  ......  திறலோனே 
வள்ளல்தொழு  ஞானக்  ......  கழலோனே 
வள்ளிமண  வாளப்  ......  பெருமாளே. 
  • துள்ளுமத வேள்
    செருக்குடன் வரும் மன்மத வேளின்
  • கைக் கணையாலே
    கைகளிலிருந்து வரும் மலர்ப் பாணங்களினாலும்,
  • தொல்லைநெடு
    நீண்ட துன்பத்தைத் தரும்
  • நீலக் கடலாலே
    நீலநிறக் கடலாலும்,
  • மெள்ளவரு
    மெதுவாக வந்து (தன்சோகக் குரலைக் காட்டும்)
  • சோலைக் குயிலாலே
    சோலையிலுள்ள குயிலினாலும்,
  • மெய்யுருகு மானை
    காதலால் உடல் உருகும் மான் போன்ற என் மகளை
  • தழுவாயே
    அணைத்துக் கொள்ள மாட்டாயா?
  • தெள்ளுதமிழ் பாட
    இனிமையான தமிழில் பாடல்களைப் பாடவல்ல
  • தெளிவோனே
    தெளிவு கொண்ட சம்பந்தப் பெருமானே,
  • செய்யகும ரேச
    செம்மை வாய்ந்த குமரேசன் எனப் பெயர்பெற்ற
  • திறலோனே
    பராக்கிரமசாலியே,
  • வள்ளல்தொழு
    வள்ளற் பெருமானாம் சிவபிரான் தொழுகின்ற
  • ஞானக் கழலோனே
    ஞானத் திருவடிகளை உடையவனே,
  • வள்ளிமண வாளப் பெருமாளே.
    வள்ளிக்கு மணவாளனாம் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com