திருப்புகழ் 1289 சினத்துச் சீறிய (பொதுப்பாடல்கள்)

தனத்தத் தானன ...... தனதான
சினத்துச்  சீறிய  ......  வழிகாணச் 
சிரித்துப்  பேசியு  ......  மயல்பூண 
கனத்துப்  போர்செயு  ......  முலைதோணக் 
கலைக்குட்  பாதியு  ......  மறைவாக 
மனத்துக்  காறுதல்  ......  வருமாறு 
மலைப்பப்  பேணியு  ......  மிகவாய 
தனத்தைச்  சூறைகொள்  ......  மடவார்தம் 
சதிக்குப்  போம்வழி  ......  தவிர்வேனோ 
தெனத்தத்  தாதென  ......  எனவேபண் 
திருத்தத்  தோடளி  ......  யிசைபாடும் 
புனத்துக்  காவல்கொள்  ......  குறமாதின் 
புணர்ச்சிக்  கேயொரு  ......  வழிதேடி 
இனத்துக்  காவல  ......  ரறியாமல் 
இணக்கித்  தோகையை  ......  மகிழ்வோயென் 
றெனக்குத்  தாளிணை  ......  யருள்வாய்சூர் 
இறக்கப்  போர்செய்த  ......  பெருமாளே. 
  • சினத்துச் சீறிய வழி காணச் சிரித்துப் பேசியும்
    சீறிக் கோபித்தும், (வசப்படுத்த) வழி ஏற்பட்டவுடன் சிரித்தும் பேசியும்,
  • மயல் பூண கனத்துப் போர் செயும் முலை தோணக் கலைக்குள் பாதியும் மறைவாக
    காம ஆசை உண்டாகும்படியாக, பருத்து விளங்கி காமப் போர் செய்யும் மார்பகம் பாதி தெரியும்படியும், ஆடையுள் பாதி மறையும்படியும் நின்று,
  • மனத்துக்கு ஆறுதல் வருமாறு மலைப்பப் பேணியும்
    (வந்தவருடைய) மனதுக்கு ஒரு ஆறுதல் உண்டாகும் பொருட்டு அவர்கள் மலைந்து மயங்கும்படி உபசரித்தும்,
  • மிகவாய தனத்தைச் சூறை கொள் மடவார் தம் சதிக்குப் போம் வழி தவிர்வேனோ
    பின்பு, மிகுந்த பொருளைக் கொள்ளை அடிக்கின்ற விலைமாதர்களுடைய வஞ்சனைச் சூழ்ச்சியில் அகப்படும் தீய நெறியைத் தவிர்க்க மாட்டேனோ?
  • தெனத்தத் தாதென எனவே பண் திருத்தத்தோடு அளி இசை பாடும்
    தெனத்த தாதென என்னும் பண்களை திருத்தமான முறையில் வண்டுகள் இசை பாடுகின்ற
  • புனத்துக் காவல் கொள் குற மாதின் புணர்ச்சிக்கே ஒரு வழி தேடி
    தினைப் புனத்தைக் காவல் செய்துவந்த குறப்பெண்ணாகிய வள்ளியை அணைவதற்கே ஒரு வழியைத் தேடி,
  • இனத்துக் காவலர் அறியாமல் இணக்கித் தோகையை மகிழ்வோய்
    அந்தக் குறக் கூட்டத்துக் காவலர்களுக்குத் தெரியாமல் மயில் போன்ற வள்ளியை இணங்க வைத்து மகிழ்ந்தவனே,
  • என்று எனக்குத் தாளினை அருள்வாய்
    என்றைக்கு எனக்கு உன் திருவடியைத் தந்து அருள் செய்வாய்?
  • சூர் இறக்கப் போர் செய்த பெருமாளே.
    இறுதியில் சூரன் மாளும்படியாகச் சண்டை செய்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com