திருப்புகழ் 1287 சமய பத்தி (பொதுப்பாடல்கள்)

தனன தத்தன தாத்தன ...... தனதான
சமய  பத்தி  வ்ருதாத்தனை  ......  நினையாதே 
சரண  பத்ம  சிவார்ச்சனை  ......  தனைநாடி 
அமைய  சற்குரு  சாத்திர  ......  மொழிநூலால் 
அருளெ  னக்கினி  மேற்றுணை  ......  தருவாயே 
உமைமுலைத்தரு  பாற்கொடு  ......  அருள்கூறி 
உரிய  மெய்த்தவ  மாக்கிந  ......  லுபதேசத் 
தமிழ்த  னைக்கரை  காட்டிய  ......  திறலோனே 
சமண  ரைக்கழு  வேற்றிய  ......  பெருமாளே. 
  • சமய பத்தி வ்ருதாத்தனை நினையாதே
    மதக் கொள்கையில் உள்ள பக்தி பயனற்றது என்று நினைக்காமல்,
  • சரண பத்ம சிவார்ச்சனை தனைநாடி அமைய
    உன் திருவடித் தாமரையில் சிவார்ச்சனை செய்ய விரும்பிய யான்மனம் பொருந்தி நிலைத்திருக்க,
  • சற்குரு சாத்திர மொழிநூலால்
    சற்குரு மூலமாகவும், சாஸ்திர மொழி நூல்கள் மூலமாகவும்,
  • அருளெனக்கினிமேல் துணைதருவாயே
    நின்னருளை நீ எனக்கு இனிமேல் துணையாகத் தந்தருள்வாயாக.
  • உமைமுலைத்தரு பாற்கொடு அருள்கூறி
    உமையின் முலை தந்தருளிய பாலை உண்டதன் காரணமாக சிவபிரானின் திருவருளை (தேவாரப் பதிகங்களில்) கூறுவதையே
  • உரிய மெய்த்தவ மாக்கி
    தனக்கு (திருஞானசம்பந்தருக்கு*) உரிய உண்மைத் தவ ஒழுக்கமாகக் கொண்டு,
  • நல் உபதேசத் தமிழ்தனை
    நல்ல உபதேசங்களைக் கொண்ட தமிழ் தன்னை
  • கரை காட்டிய திறலோனே
    கரை கண்ட பராக்கிரமசாலியே,
  • சமணரைக்கழுவேற்றிய பெருமாளே.
    சமணர்களை (வாதில் வென்று) கழுவேற்றிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com