திருப்புகழ் 1286 கோடான மேருமலை (பொதுப்பாடல்கள்)

தானான தானதனத் ...... தனதான
கோடான  மேருமலைத்  ......  தனமானார் 
கோமாள  மானவலைக்  ......  குழலாதே 
நாடோறு  மேன்மைபடைத்  ......  திடவேதான் 
நாயேனை  யாளநினைத்  ......  திடொணாதோ 
ஈடேற  ஞானமுரைத்  ......  தருள்வோனே 
ஈராறு  தோள்கள்படைத்  ......  திடுவோனே 
மாடேறு  மீசர்தமக்  ......  கினியோனே 
மாதானை  யாறுமுகப்  ......  பெருமாளே. 
  • கோடு ஆன மேரு மலைத் தனம் மானார் கோமாளம் ஆன வலைக்கு உழலாதே
    சிகரங்களைக் கொண்ட மேரு மலையை ஒத்த மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கொண்டாட்டமான வலைக்குள் பட்டுத் திரியாமல்,
  • நாள் தோறும் மேன்மை படைத்திடவே தான் நாயேனை ஆள நினைத்திட ஒணாதோ
    நாளுக்கு நாள் சிறப்பும் புகழும் பெருகி உண்டாக நாய் போன்ற அடியேனை ஆட்கொள்ள நினைத்திடக் கூடாதோ?
  • ஈடேற ஞானம் உரைத்து அருள்வோனே
    நான் ஈடேறும்படி ஞானோபதேசம் செய்து அருளியவனே,
  • ஈராறு தோள்கள் படைத்திடுவோனே
    பன்னிரண்டு தோள்களைக் கொண்டவனே,
  • மாடு ஏறும் ஈசர் தமக்கு இனியோனே
    ரிஷபத்தில் ஏறுகின்ற சிவபெருமானுக்கு இனியவனே,
  • மா தானை ஆறு முகப் பெருமாளே.
    சிறந்த சேனைகளையும், ஆறு திரு முகங்களையும் கொண்ட பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com