திருப்புகழ் 1285 கொடிய மதவேள் (பொதுப்பாடல்கள்)

தனதனன தானத் ...... தனதான
கொடியமத  வேள்கைக்  ......  கணையாலே 
குரைகணெடு  நீலக்  ......  கடலாலே 
நெடியபுகழ்  சோலைக்  ......  குயிலாலே 
நிலைமைகெடு  மானைத்  ......  தழுவாயே 
கடியரவு  பூணர்க்  ......  கினியோனே 
கலைகள்தெரி  மாமெய்ப்  ......  புலவோனே 
அடியவர்கள்  நேசத்  ......  துறைவேலா 
அறுமுகவி  நோதப்  ......  பெருமாளே. 
  • கொடியமத வேள்கைக் கணையாலே
    கொடுமை செய்யும் மன்மதனுடைய கரத்திலிருந்து விடும் மலர் அம்புகளாலே,
  • குரைகண் நெடு நீலக் கடலாலே
    அலை ஓசை மிகுந்து ஆரவாரிக்கும் பெரிய நீலக் கடலினாலே,
  • நெடியபுகழ் சோலைக் குயிலாலே
    நீண்டுயர்ந்த சோலையில் பாடிப் புகழ் பெற்ற குயிலினாலே,
  • நிலைமைகெடு மானைத் தழுவாயே
    (உன்னைப் பிரிந்து) தன்னிலைமை கெட்டு நிலைகுலையும் மானொத்த இப்பெண்ணைத் தழுவமாட்டாயா?
  • கடியரவு பூணர்க்கு இனியோனே
    கடிக்கும் பாம்பை ஆபரணமாகப் பூண்ட சிவனாருக்கு இனியவனே,
  • கலைகள்தெரி மாமெய்ப் புலவோனே
    ஆய கலைகள் அனைத்தையும் தெரிந்த உண்மை வித்தகனே,
  • அடியவர்கள் நேசத்து உறைவேலா
    உன் அடியார்களின் பக்தியில் வாழ்கின்ற வேலனே,
  • அறுமுக விநோதப் பெருமாளே.
    ஆறுமுகனே, திருவிளையாடல்கள் பல புரிந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com