திருப்புகழ் 1284 கருப்பையில் (பொதுப்பாடல்கள்)

தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த ...... தனதான
கருப்பை  யிற்சுக்  கிலத்  துலைத்துற்  பவித்து  ......  மறுகாதே 
கபட்ட  சட்டர்க்  கிதத்த  சித்ரத்  தமிழ்க்க  ......  ளுரையாதே 
விருப்ப  முற்றுத்  துதித்தெ  னைப்பற்  றெனக்க  ......  ருதுநீயே 
வெளிப்ப  டப்பற்  றிடப்ப  டுத்தத்  தருக்கி  ......  மகிழ்வோனே 
பருப்ப  தத்தைத்  தொளைத்த  சத்திப்  படைச்ச  ......  மரவேளே 
பணிக்கு  லத்தைக்  கவர்ப்ப  தத்துக்  களித்த  ......  மயிலோனே 
செருப்பு  றத்துச்  சினத்தை  முற்றப்  பரப்பு  ......  மிசையோனே 
தினைப்பு  னத்துக்  குறத்தி  யைக்கைப்  பிடித்த  ......  பெருமாளே. 
  • கருப்பையிற் சுக்கிலத்து உலைத்து உற்பவித்து மறுகாதே
    கர்ப்பப் பையிலுள்ள சுக்கிலத்திலே (பெண் முட்டையிலே) அலைப்புண்டு மீண்டும் பிறந்து கலங்காமலும்,
  • கபட்டு அசட்டர்க்கு இதத்த சித்ரத் தமிழ்க்கள் உரையாதே
    வஞ்சனைமிக்க மூடர்களுக்கு இன்பம் தருவதான தமிழ்ப் பாடல்களைச் சொல்லாமலும்,
  • விருப்பமுற்றுத் துதித்து எனைப்பற்று எனக்கருதுநீயே
    ஆசையுடன் துதித்து என்னைப் பற்றிக் கொள்வாயாக என்று என்னைக் குறித்து நீயே நினைக்க வேண்டுகிறேன்.
  • வெளிப்படப் பற்றிடப் படுத்தத் தருக்கி மகிழ்வோனே
    அடியார்களின் முன் வெளிப்படவும், அவர்களைக் கைவிடாது பற்றிக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் விருப்பத்துடன் வந்து மகிழ்ச்சி அடைபவனே,
  • பருப்பதத்தைத் தொளைத்த சத்திப் படைச் சமரவேளே
    கிரெளஞ்சமலையைத் தொளைத்த சக்திவேலினை ஏந்திய போர்வீரனே,
  • பணிக்குலத்தைக் கவர்ப்பதத்துக்கு அளித்த மயிலோனே
    பாம்புக் கூட்டங்களை தனது பிளவுபட்ட பாதங்களுக்கு இடையே அகப்படுத்தியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே,
  • செருப்புறத்துச் சினத்தை முற்றப் பரப்பும் இசையோனே
    போர்க்களத்தில் உன் கோபத்தை முற்றிலுமாக விரித்துக்காட்டிய புகழை உடையவனே,
  • தினைப்புனத்துக் குறத்தியைக்கைப் பிடித்த பெருமாளே.
    தினைப்புனத்திலே குறத்தி வள்ளியின் கையைப்பிடித்து பாணிக்கிரகணம் (திருமணம்) செய்து கொண்ட பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com