திருப்புகழ் 1283 கருப்பற்று ஊறி (பொதுப்பாடல்கள்)

தனத்தத் தானத் ...... தனதான
கருப்பற்  றூறிப்  ......  பிறவாதே 
கனக்கப்  பாடுற்  ......  றுழலாதே 
திருப்பொற்  பாதத்  ......  தநுபூதி 
சிறக்கப்  பாலித்  ......  தருள்வாயே 
பரப்பற்  றாருக்  ......  குரியோனே 
பரத்தப்  பாலுக்  ......  கணியோனே 
திருக்கைச்  சேவற்  ......  கொடியோனே 
செகத்திற்  சோதிப்  ......  பெருமாளே. 
  • கருப்பற்று ஊறிப் பிறவாதே
    மீண்டும் கருவிலே பிறக்கவேண்டும் என்ற ஆசையில் ஊறி மறுபடி பிறக்காமலும்,
  • கனக்கப் பாடுற்று உழலாதே
    மிகவும் கஷ்டங்களை அடைந்து யான் அலைந்து திரியாமலும்,
  • திருப்பொற் பாதத்து அநுபூதி
    உன் அழகிய திருவடிகளாம் முக்தி அனுபவத்தை
  • சிறக்கப் பாலித்து அருள்வாயே
    யான் சிறக்கும்படியாக என்னை ஆசீர்வதித்து அருள்வாயாக.
  • பரப்பற்றாருக்கு உரியோனே
    ஆசைப் பெருக்கு இல்லாதவர்களுக்கு உரிமையானவனே,
  • பரத்து அப்பாலுக்கு அணியோனே
    மேலானதாய் யாவற்றையும் கடந்து நிற்கும் பொருளுக்கு அருகில் உள்ளவனே,
  • திருக்கைச் சேவற் கொடியோனே
    திருக்கரத்தில் சேவற்கொடியை ஏந்தியவனே,
  • செகத்திற் சோதிப் பெருமாளே.
    இவ்வுலகில் ஜோதி ரூபமாக விளங்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com