தந்தந்த தனத்தன தாத்தன ...... தனதான
என்பந்த வினைத்தொடர் போக்கிவி ...... சையமாகி
இன்பந்தனை யுற்றும காப்ரிய ...... மதுவாகி
அன்புந்திய பொற்கிணி பாற்கட ...... லமுதான
அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத ...... மருள்வாயே
முன்புந்தி நினைத்துரு வாற்சிறு ...... வடிவாகி
முன்திந்தி யெனப்பர தாத்துட ...... னடமாடித்
தம்பந்த மறத்தவ நோற்பவர் ...... குறைதீரச்
சம்பந்த னெனத்தமிழ் தேக்கிய ...... பெருமாளே.
- என்பந்த வினைத்தொடர் போக்கி விசையமாகி
என்னைச் சூழ்ந்து கட்டியுள்ள வினை எனப்படும் சங்கிலித் தொடரை அறுத்து யான் வெற்றி பெற்று, - இன்பந்தனை யுற்று மகாப்ரியம் அதுவாகி
இன்ப நிலையை அடைந்து, நிரம்பப் பிரியம் கொண்டு, - அன்பு உந்திய பொற்கிணி பாற்கடல் அமுதான
அன்பு பெருகிய நிலையிலே பொற்கிண்ணத்தில் உள்ள பாற்கடல் அமிர்தத்திற்கு நிகரான - அந்தந்தனில் இச்சைகொள் ஆற்பதம் அருள்வாயே
முடிவான பேரின்பப் பொருள் மீது ஆசையைக் கொள்கின்ற ஆதார நிலையை நீ தந்தருள்வாயாக. - முன் புந்தி நினைத்து உருவாற் சிறு வடிவாகி
முன்பு, சூரனை அழிக்க மனத்தினில் எண்ணி, உருவத்தில் சிறியனாக, பால குமாரனாக, அவதரித்து, - முன்திந்தியெனப் பரதாத்துடன்நடமாடி
சூர சம்ஹார காலத்தில் திந்தி என்ற தாளத்தில் பரத சாஸ்திரப்படி துடி என்னும் கூத்தினை நடனமாடி*, - தம்பந்தம் அறத் தவ நோற்பவர் குறைதீர
தங்களது பாச பந்தம் அகல்வதற்காக தவநிலையில் இருப்பவர்களது குறைகள் நீங்க, - சம்பந்தன் எனத்தமிழ் தேக்கிய பெருமாளே.
திருஞானசம்பந்தனாக** அவதரித்து தமிழை நிரம்பப் பருகி தேவாரமாக உலகுக்குத் தந்த பெருமாளே.