தத்ததன தானத் ...... தனதான
இத்தரணி மீதிற் ...... பிறவாதே
எத்தரொடு கூடிக் ...... கலவாதே
முத்தமிழை யோதித் ...... தளராதே
முத்தியடி யேனுக் ...... கருள்வாயே
தத்துவமெய்ஞ் ஞானக் ...... குருநாதா
சத்தசொரு பாபுத் ...... தமுதோனே
நித்தியக்ரு தாநற் ...... பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப் ...... பெருமாளே.
- இத்தரணி மீதிற் பிறவாதே
இந்தப் பூமியில் பிறக்காமலும், - எத்தரொடு கூடிக் கலவாதே
ஏமாற்றுபவர்களுடன் கூடிக் கலந்து கொள்ளாமலும், - முத்தமிழை யோதித் தளராதே
இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் படித்துப் படித்துச் சோர்வடையாமலும், - முத்தி அடியேனுக்கு அருள்வாயே
முக்திநிலையை எனக்குத் தந்தருள வேண்டுகிறேன். - தத்துவமெய்ஞ் ஞானக்குருநாதா
உண்மைப் பொருளாகிய மெய்ஞ்ஞானத்தை உபதேசம் செய்யவல்ல குருமூர்த்தியே, - சத்தசொருபா
ஒலி (சப்தம்) வடிவிலே திகழ்பவனே, - புத்தமுதோனே
புதிய அமிர்தம் போன்றவனே, - நித்தியக்ருதா
தினந்தோறும் எனக்கு நன்மையே செய்பவனே, - நற் பெருவாழ்வே
என் வாழ்வின் நல்ல பெரும் செல்வமே, - நிர்த்தஜெக ஜோதிப் பெருமாளே.
ஆடல் வல்லோனும், அகில உலகிற்கும் பேரொளியாய் விளங்குவோனுமான பெருமாளே.