தானனா தத்ததன தானனா தத்ததன
தானனா தத்ததன ...... தனதான
வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன்
வீசுபா ணத்தைநிக ...... ரெனலாகும்
வேதைசா தித்தவிழி மாதரா பத்தில்விளை
யாடிமோ கித்திரியும் ...... வெகுரூப
கோலகா லத்தைவிட லாகிமா றக்குணவி
காரமோ டத்தெளிய ...... அரிதான
கூறொணா தற்பரம ஞானரூ பத்தின்வழி
கூடலா கப்பெருமை ...... தருவாயே
வாலிமார் பைத்துணிய ஏழ்மரா இற்றுவிழ
வாளிபோ டக்கருது ...... மநுராமன்
வானுலோ கத்திலம ரேசனோ லிக்கவளை
யூதிமோ கித்துவிழ ...... அருள்கூரும்
நீலமே னிக்குமரு காவுதா ரத்துவரு
நீசர்வாழ் வைக்களையு ...... மிளையோனே
நேசமா கக்குறவர் தோகைமா னைப்புணரு
நீபதோ ளொப்பரிய ...... பெருமாளே.
- வேலை வாளைக் கொடிய ஆலகாலத்தை மதன் வீசு
பாணத்தை நிகர் எனல் ஆகும்
வேலாயுதத்தையும், வாளையும், கொடுமையான ஆலகால விஷத்தையும், மன்மதன் செலுத்துகின்ற பாணங்களையும் ஒப்பாகச் சொல்லக் கூடிய - வேதை சாதித்த விழி மாதர் ஆபத்தில் விளையாடி மோகித்து
இரியும்
துன்பம் தருவதை நிலை நாட்டுகின்ற கண்களை உடைய விலைமாதர்களின் ஆபத்தான சரசங்களில் விளையாடி, காமப் பற்று கொண்டு நிலை கெடுகின்ற - வெகு ரூப கோலகாலத்தை விடல் ஆகி மாறக் குண விகாரம்
ஓட
பல வகையான ஆடம்பரங்களை விட்டு விட்டு, நல் வழிக்கு மாறி வரவும், குண வேறுபாடுகள் என்னை விட்டு நீங்கவும், - தெளிய அரிதான கூற ஒ(ண்)ணா தற்பரம ஞான ரூபத்தின்
வழி கூடலாகப் பெருமை தருவாயே
தெளிந்து அறிவதற்கு அரிதானதும், எடுத்துச் சொல்லுவதற்கு முடியாததானதும், மேம்பட்டதானதும், ஞான மயமானதும் ஆன நெறி கூடும்படியான பெருமையைத் தந்து அருள்வாய். - வாலி மார்பைத் துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போடக்
கருது(ம்) மநு ராமன்
வாலியின் மார்பைப் பிளக்கவும், ஏழு மராமரங்கள் முறிந்து விழவும், அம்பைச் செலுத்த எண்ணம் கொண்ட மநுவம்சத்தில் வந்த ராமனாகிய திருமால், - வான் உலோகத்தில் அமரேசன் ஒலிக்க வளை ஊதி
மோகித்து விழ அருள் கூறும் நீல மேனிக்கு மருகா
விண்ணுலகில் தேவர் தலைவனாகிய இந்திரன் அபயக் கூச்சலிட, சங்கை ஊதி, அந்த நாதத்தால் தேவர்கள் யாவரும் மயங்கி விழச்செய்த, அருள் மிகுந்துள்ள நீல நிறக் கண்ணனாகிய* திருமாலுக்கு மருகனே, - உதாரத்து வரு நீசர் வாழ்வைக் களையும் இளையோனே
மேம்பாட்டுடன் படாடோபமாக வாழ்ந்து வந்த இழிந்தோர்களாகிய அசுரர்களுடைய வாழ்வை ஒழித்து எறிந்த இளையவனே, - நேசமாகக் குறவர் தோகை மானைப் புணரும் நீப தோள்
ஒப்பு அரிய பெருமாளே.
அன்பு கூடும்படி, மயில் போன்ற குறப்பெண்ணாகிய மான் அனைய வள்ளியைத் தழுவும் கடப்ப மாலை அணிந்த தோளின் வலிமைக்கு இணை இல்லாத பெருமாளே.