தானதன தாத்த தானதன தாத்த
தானதன தாத்த ...... தனதான
வீணையிசை கோட்டி யாலமிட றூட்டு
வீரமுனை யீட்டி ...... விழியார்தம்
வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில்
வீழுமயல் தீட்டி ...... யுழலாதே
ஆணியுள வீட்டை மேவியுள மாட்டை
யாவலுட னீட்டி ...... யழியாதே
ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டி
யானநிலை காட்டி ...... யருள்வாயே
கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர்
கேள்சுருதி நாட்டி ...... லுறைவோனே
கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு
கீரரியல் கேட்ட ...... க்ருபைவேளே
சேணினுயர் காட்டில் வாழுமற வாட்டி
சீதவிரு கோட்டி ...... லணைவோனே
சீறவுணர் நாட்டி லாரவழல் மூட்டி
தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே.
- வீணை இசை கோட்டி ஆலம் இடறு ஊட்டு வீர(ம்) முனை
ஈட்டி விழியார் தம்
வீணையில் இசையைப் பிறப்பித்து, ஆலகால விஷம் தாக்குதலைச் செய்யும் வீரத்தையும், கூர்மையையும் கொண்ட ஈட்டி போன்ற கண்களை உடைய விலைமாதர்களால் ஏற்படும் - வேதனையில் நாட்டம் ஆகி இடர் பாட்டில் வீழும் மயல் தீட்டி
உழலாதே
வேதனையில் கவனம் வைத்தவனாய், துன்பக் குழியில் விழுவதான காம மோகம் கூராகி மிகுந்து நான் திரியாமல், - ஆணி உள வீட்டை மேவி உளம் மாட்டை ஆவலுடன் ஈட்டி
அழியாதே
(தங்குவதற்கு) ஆதாரமாய் உள்ள வீட்டை விரும்பி, பொன்னை ஆசையுடன் சேர்த்து இங்ஙனம் பொழுதைப் போக்கி அழிந்து போகாமல், - ஆவி உறை கூட்டில் ஞான மறை ஊட்டி ஆன நிலை காட்டி
அருள்வாயே
உயிர் வாசம் செய்யும் கூடாகிய இந்த உடலில் ஞான மறைப் பொருள்களை உபதேசித்து, நன்மை தருவதான நிலையைக் காட்டி அருள்வாயாக. - கேணி உற வேட்ட ஞான நெறி வேட்டர் கேள் சுருதி
நாட்டில் உறைவோனே
கிணறு போல ஆழமாக ஊறுகின்ற, விரும்பப்படுவதான, ஞான மார்க்கத்தை நாடுபவர்கள் ஆராய்கின்ற வேதத்தில் உறைபவனே, - கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட
க்ருபை வேளே
கீத இசையுடன் வேத மொழி போன்ற திருமுருகாற்றுப்படை என்ற தமிழ் மாலையைச் சூட்டிய நக்கீரருடைய இயற்றமிழைக் கேட்டருளிய கருணையாளனே, - சேணின் உயர் காட்டில் வாழும் மறவாட்டி சீத இரு கோட்டில்
அணைவோனே
ஆகாயம் வரை உயர்ந்துள்ள வள்ளி மலைக் காட்டில் வசிக்கின்ற வேடப் பெண்ணாகிய வள்ளியின் குளிர்ந்த மலை போன்ற மார்பகங்களை அணைபவனே, - சீறு அவுணர் நாட்டில் ஆர அழல் மூட்டி தேவர் சிறை மீட்ட
பெருமாளே.
கோபக் குணம் உடைய அசுரர்களுடைய நாட்டில் நிரம்ப நெருப்பை மூளச்செய்து, தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே.