திருப்புகழ் 1278 விழையும் மனிதரை (பொதுப்பாடல்கள்)

தனதனன தனதனன தனதனன தனதனன
தத்தத் தனந்தனம் தத்தத் தனந்தனம் ...... தந்ததான
விழையுமனி  தரையுமுநி  வரையுமவ  ருயிர்  துணிய 
வெட்டிப்  பிளந்துளம்  பிட்டுப்  பறிந்திடுஞ்  ......  செங்கண்வேலும் 
விரையளக  முகிலுமிள  நகையும்ருக  மதகனவி 
சித்ரத்  தனங்களுந்  தித்தித்த  தொண்டையும்  ......  புண்டரீகச் 
சுழிமடுவு  மிடையுமழ  கியமகளிர்  தருகலவி 
சுட்டித்  திரிந்திஙன்  தட்டுப்  படுங்கொடும்  ......  பங்கவாழ்வுந் 
தொலைவில்பிற  வியுமகல  வொருமவுன  பரமசுக 
சுத்தப்  பெரும்பதஞ்  சித்திக்க  அன்புடன்  ......  சிந்தியாதோ 
எழுதரிய  அறுமுகமு  மணிநுதலும்  வயிரமிடை 
யிட்டுச்  சமைந்தசெஞ்  சுட்டிக்  கலன்களுந்  ......  துங்கநீள்பன் 
னிருகருணை  விழிமலரு  மிலகுபதி  னிருகுழையும் 
ரத்நக்  குதம்பையும்  பத்மக்  கரங்களுஞ்  ......  செம்பொனூலும் 
மொழிபுகழு  முடைமணியு  மரைவடமு  மடியிணையு 
முத்தச்  சதங்கையுஞ்  சித்ரச்  சிகண்டியுஞ்  ......  செங்கைவேலும் 
முழுதுமழ  கியகுமர  கிரிகுமரி  யுடனுருகு 
முக்கட்  சிவன்பெருஞ்  சற்புத்ர  வும்பர்தந்  ......  தம்பிரானே. 
  • விழையும் மனிதரையும் முநிவரையும் அவர் உயிர் துணிய வெட்டிப் பிளந்து
    தம்மீது ஆசை கொண்ட மனிதர்களையும், முனிவர்களையும் கூட, அவர்களுடைய உயிரே அறுபடும்படி இரக்கமின்றி வெட்டிப் பிளந்து,
  • உ(ள்)ளம் பிட்டுப் பறிந்திடும் செம் கண் வேலும்
    மனத்தையும் பறித்துப் பிடுங்குகின்ற சிவந்த கண்களாகிய வேலும்,
  • விரை அளகம் முகிலும் இள நகையும் ம்ருகமத கனவிசித்ரத் தனங்களும்
    நறு மணம் கொண்டுள்ள, மேகம் போல் கரிய கூந்தலும், புன் சிரிப்பும், கஸ்தூரி அணிந்த பெருத்த, அதிசயிக்கத் தக்க மார்பகங்களும்,
  • தித்தித்த தொண்டையும் புண்டரீகச் சுழி மடுவும் இடையும்
    இனிக்கும் குரலும், தாமரை போன்ற குழிந்துள்ள கொப்பூழ்த் தடமும், இடுப்பும்,
  • அழகிய மகளிர் தரு கலவி சுட்டித் திரிந்து
    இவை எல்லாம் கொண்டு அழகு நிறைந்த விலைமாதர்கள் தருகின்ற புணர்ச்சி இன்பத்தை வேண்டித் திரிந்து,
  • இங்ஙன் தட்டுப் படும் கொடும் பங்க வாழ்வும் தொலைவு இல் பிறவியும் அகல
    இந்த விதமாகத் தடை படுகின்ற கொடுமையான இடர் நிறைந்த வாழ்க்கையும், முடிவே இல்லாத பிறப்புக்களும் என்னை விட்டு நீங்க,
  • ஒரு மவுன பரம சுக சுத்தப் பெரும் பதம் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ
    ஒப்பற்ற மெளுனமாகிய, மேலான சுகமான, பரிசுத்தமான பெரிய திருவடி எனக்குக் கிடைக்குமாறு நீ அன்புடன் நினைக்கக் கூடாதோ?
  • எழுத அரிய அறுமுகமும் அணி நுதலும் வயிரம் இடையிட்டுச் சமைந்த செம் சுட்டிக் கலன்களும்
    எழுத முடியாத எழிலுடைய ஆறு திரு முகங்களும், அழகிய நெற்றியும், வைரம் மத்தியில் பொதிக்கப்பட்டு அமைந்துள்ள செவ்விய சுட்டி முதலிய அணிகலன்களும்,
  • துங்க நீள் பன்னிரு கருணை விழி மலரும் இலகு பதினிரு குழையும்
    பரிசுத்தமான, நீண்ட பன்னிரண்டு கருணை பொழியும் கண் மலர்களும், விளங்கும் பன்னிரண்டு குண்டலங்களும்,
  • ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களும் செம் பொன் நூலும்
    ரத்னக் காதணியும், தாமரை போன்ற கைகளும், செம்பொன்னால் ஆகிய பூணூலும்,
  • மொழி புகழும் உடை மணியும் அரை வடமும் அடி இணையும்
    சொல்லிப் புகழத் தக்க உடை மணியும், அரையில் கட்டிய நாணும், இரு திருவடிகளும்,
  • முத்தச் சதங்கையும் சித்ரச் சிகண்டியும் செம் கை வேலும் முழுதும் அழகிய குமர
    முத்தாலான கிண்கிணியும், அழகிய மயிலும், திருக் கரத்தில்வேலாயுதமும், (இவ்வாறு) முழுதும் அழகு மயமாக உள்ள குமரனே,
  • கிரி குமரியுடன் உருகும் முக்கண் சிவன் பெறும் சற் புத்ர
    இமய மலையின் மகளாகிய பார்வதிக்காக மனம் நெகிழ்ந்த முக்கண்ணனாகிய சிவ பெருமான் பெற்ற நற்குணம் பொருந்திய பிள்ளையே,
  • உம்பர் தம் தம்பிரானே.
    தேவர்களின் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com