திருப்புகழ் 1277 வரிவிழி பூசலாட (பொதுப்பாடல்கள்)

தனதன தான தான, தனதன தான தான
தனதன தான தான ...... தனதான
வரிவிழி  பூச  லாட  இருகுழை  யூச  லாட 
வளர்முலை  தானு  மாட  ......  வளையாட 
மணிவட  மாலை  யாட  முருகவி  ழோதி  யாட 
மதுரமு  தூறி  வீழ  ......  அநுராகம் 
இருவரு  மேக  போக  மொருவர்த  மாக  மாக 
இதமொடு  கூடி  மாயை  ......  படுபோதும் 
இருகர  மாறு  மாறு  மறுமுக  நீப  மார்பு 
மிருகழல்  தானு  நானு  ......  மறவேனே 
திருநட  மாடு  காளி  பயிரவி  மோடி  சூலி 
திரிபுர  நீற  தாக  ......  அனல்மோதுஞ் 
சிவைகயி  லாச  வாசி  மலைமகள்  நாரி  பாரி 
திருமுலை  யாயி  தாயி  ......  யருள்பாலா 
குருபர  நாத  னாகி  யரனொரு  காதி  லோது 
குணநிதி  யாசை  நேச  ......  முருகோனே 
குறமக  ளார  பார  முகிழ்முலை  மீது  தாது 
குலவிய  மாலை  மேவு  ......  பெருமாளே. 
  • வரி விழி பூசல் ஆட இரு குழை ஊசலாட
    ரேகைகளைக் கொண்ட கண்கள் காமப் போரை விளைவிக்க, இரண்டு குண்டலங்களும் ஊஞ்சல் ஆடுவது போல் ஆட,
  • வளர் முலை தானும் ஆட வளை ஆட மணி வட மாலை ஆட முருகு அவிழ் ஓதி ஆட
    எழுந்தோங்கு மார்பகங்களும் ஆட, வளையல்கள் ஆட, ரத்தின சரங்களாகிய மாலைகள் ஆட, நறுமணம் வீசிக் கமழும் கூந்தல் ஆடி அலைய,
  • மதுர அமுது ஊறி வீழ அனுராகம் இருவரும் ஏக போகம் ஒருவர் தம் ஆகம் ஆக
    இனிமையான அமுதம் ஊறுகின்ற மொழிகள் சிதறி வெளிவர, காமப் பற்றுடன் ஆணும் பெண்ணுமாகிய இருவரும் ஒன்றாய்க் கலத்தலில் இருவர் உடல்களும் ஓருடலாக,
  • இதமொடு கூடி மாயை படு போதும் இரு கரம் ஆறும் ஆறும் அறு முக(ம்) நீப(ம்) மார்பும் இரு கழல் தானு(ம்) நானு(ம்) மறவேனே
    இவ்வாறு இன்ப சுகத்துடன் கூடிப் புணர்ந்து உலக மாயையில் நான் அகப்பட்டிருக்கும் போதும், பெருமை பொருந்திய உனது பன்னிரண்டு கைகளும், ஆறு திரு முகங்களும், கடப்ப மாலை அணிந்துள்ள மார்பும், இரண்டு திருவடிகளும் நான் மறக்க மாட்டேன்.
  • திரு நடம் ஆடும் காளி பயிரவி மோடி சூலி திரிபுர(ம்) நீறு அதாக அனல் மோதும் சிவை
    திருநடனம் ஆடுகின்ற காளி, பைரவி, துர்க்கை, சூலம் ஏந்தியவள், திரிபுரங்களையும் சாம்பல் ஆகும்படி நெருப்பை வீசித் தாக்கிய சிவாம்பிகை,
  • கயிலாச வாசி மலை மகள் நாரி பாரி திரு முலை ஆயி தாயி அருள் பாலா
    கைலாயத்தில் வாழ்பவள், இமயமலையின் குமாரி, நாரீமணியாகிய பெரியவள், திருமுலைப் பால் தந்த தாய் பார்வதி பெற்றருளிய குழந்தையே,
  • குரு பர நாதன் ஆகி அரன் ஒரு காதில் ஓது குணநிதி ஆசை நேச முருகோனே
    குருபர மூர்த்தியாய் சிவபெருமானது செவியில் பிரணவத்தை உபதேசம் செய்த குணச் செல்வனே, அன்பும் நண்பும் மிகக் கொண்ட முருகவேளே,
  • குற மகள் ஆரம் பார முகிழ் முலை மீது தாது குலவிய மாலை மேவு பெருமாளே.
    குறமகளாகிய வள்ளியின் முத்துமாலை அணிந்ததும், பாரமானதும், வெளித் தோன்றுவதுமான மார்பகங்களின் மேல், மகரந்தப் பொடி படியும் உனது மாலைகள் பொருந்தப் பெற்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com