தனதன தானத் தானன தனதன தானத் தானன
தனதன தானத் தானன ...... தனதான
முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி
முகுளப டீரக் கோமள ...... முலைமீதே
முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை
முதியபு ராரிக் கோதிய ...... குருவேயென்
றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு
முணர்வினோ டூடிக் கூடியும் ...... வழிபாடுற்
றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி
யுனதடி யாரைச் சேர்வது ...... மொருநாளே
மருகனெ னாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்
வரவிடு மாயப் பேய்முலை ...... பருகாமேல்
வருமத யானைக் கோடவை திருகிவி ளாவிற் காய்கனி
மதுகையில் வீழச் சாடிய ...... சதமாபுட்
பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொரு
சகடுதை யாமற் போர்செய்து ...... விளையாடிப்
பொதுவியர் சேரிக் கேவளர் புயல்மரு காவஜ் ராயுத
புரமதில் மாபுத் தேளிர்கள் ...... பெருமாளே.
- முருக மயூர சேவக சரவண
முருகனே, மயிலேறும் வீரனே, சரவணபவனே, - ஏனல் பூ தரி முகுள படீர கோமள முலை மீதே முழுகிய
காதல் காமுக
வள்ளிமலையில் மிகுந்து விளைந்த தினைப்புனத்தைக் காவல் செய்த மலைப் பெண் வள்ளியின் தாமரை அரும்பு போன்ற, சந்தனம் அணிந்த, அழகுடைய மார்பின் மேல் முழுகிய அன்பு மிக்க ஆர்வலனே, - பதி பசு பாசத் தீர் வினை
கடவுள், உயிர், தளை என்ற மும்மைத் தத்துவங்களின் முடிவான உட்பொருளை - முதிய புராரிக்கு ஓதிய குருவே என்று
பழமையான, திரிபுரம் அழித்த, சிவபெருமானுக்கு உபதேசம் செய்த குருநாதனே என்று துதித்து, - உருகியும் ஆடிப் பாடியும் இரு கழல் நாடிச் சூடியும்
உள்ளம் குழைந்து உருகியும், ஆடியும், பாடியும், உனது இரு திருவடிகளை நாடியும், அவற்றைத் தலையில் சூடியும் - உணர்வினொடு ஊடி கூடியும் வழி பாடு உற்று
ஞான உணர்ச்சியோடு பிணங்கியும், மீணடும் இணங்கிக் கலந்தும், வழி பாட்டில் பொருந்த நின்று, - உலகினோர் ஆசைப் பாடு அற நிலை பெறும் ஞானத்தால்
இனி
உலகினோர் மீது வைத்த ஆசைப்பாடு அறவே அற்றுப் போக, நிலைபெற்றுள்ள பெரிய ஞான உணர்வுடன் இனி மேல் - உனது அடியாரைச் சேர்வதும் ஒரு நாளே
உன் அடியார்களைச் சேர்ந்து மகிழக்கூடிய ஒரு நாளும் உண்டாகுமோ? - மருகன் எ(ன்)னாமல் சூழ் கொலை கருதிய மாமப் பாதகன்
சகோதரி தேவகியின் மகன் என்று சற்றும் கருதாமல் சூழ்ச்சியுடன் அந்த மருகனைக் கொல்ல எண்ணிய மாமனாம் பாவியாகிய கம்சன், - வர விடு மாயப் பேய் முலை பருகா
அனுப்பி வைத்த, மாயத்தில் வல்ல, பூதனை என்ற பேயின் முலையின் விஷப் பாலோடு உயிரையும் அருந்தியும், - மேல் வரும் மத யானைக் கோடு அவை திருகி
பின்னும், கொல்ல வரும் மத யானையாகிய குவலயா பீடத்தின் தந்தங்களைத் திருகிப் பறித்தும் (அந்த யானையைக் கொன்றும்), - விளாவில் காய் கனி மதுகையில் வீழச் சாடிய
(வஞ்சனையாக கபிஸ்டாசுரன் என்ற ஓர் அரக்கன் விளாமரமாக நிற்க) அந்த விளா மரத்தின் காய்களும் கனிகளும் மரத்தோடு சேர்ந்து விழும்படி தனது வன்மையால் (தேனுகாசுரன் என்ற கன்றின் உருவில் வந்த மற்றோர் அசுரனைக் கொண்டு) அடித்தும், - அச் சதம் மா புள்பொருது
பெரிய இறக்கையுடைய பறவையாகிய (கேசி என்ற) கொக்குடன் சண்டை செய்தும் (அதன் வாயைப் பிளந்தும்), - இரு கோரப் பாரிய மருது இடை போய்
அச்சத்தைத் தரும் இரண்டு பருத்த மருத மரங்களுக்கு இடையில் (இடுப்புடன் கட்டிய உரலுடன்) தவழ்ந்து சென்றும் (அம்மரங்களை முறித்தும்)*, - அப்போது ஒரு சகடு உதையா மல் போர் செய்து விளையாடி
அப்போது ஒரு வண்டிச் சக்கர வடிவில் வந்த (சகட) அசுரனை உதைத்தும், (சாணூரன், முஷ்டிகன் என்ற) மல்லர்களுடன் போர் செய்து விளையாடியும், - பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா
இடையர்களின் சேரியில் வளர்ந்த மேக வண்ணனாகிய கண்ணனாம் திருமாலின் மருகனே, - வஜ்ராயுத புரம் அதில் மா புத்தேளிர்கள் பெருமாளே.
குலிஜம் என்ற ஆயுதம் ஏந்திய இந்திரனின் ஊராகிய பொன்னுலகத்தில் சிறந்த தேவர்கள் போற்றும் பெருமாளே.