தானா தனதன தானா தனதன
தானா தனதன ...... தனதான
மூலா நிலமதின் மேலே மனதுறு
மோகா டவிசுடர் ...... தனைநாடி
மோனா நிலைதனை நானா வகையிலு
மோதா நெறிமுறை ...... முதல்கூறும்
லீலா விதமுன தாலே கதிபெற
நேமா ரகசிய ...... வுபதேசம்
நீடூ ழிதனிலை வாடா மணியொளி
நீதா பலமது ...... தருவாயே
நாலா ருசியமு தாலே திருமறை
நாலா யதுசெப ...... மணிமாலை
நாடாய் தவரிடர் கேடா வரிகரி
நாரா யணர்திரு ...... மருகோனே
சூலா திபர்சிவ ஞானார் யமனுதை
காலார் தரவரு ...... குருநாதா
தோதீ திகுதிகு தீதீ செகசெக
சோதீ நடமிடு ...... பெருமாளே.
- மனதுறு மோக அடவி
மனத்தில் பொருந்தியுள்ள ஆசை என்ற காடு - மூலா நிலமதின் மேலே சுடர் தனைநாடி
(வேறு வழிகளில் செல்லாமல்) மூலாதார நிலைக்கு மேல் உள்ள ஜோதியினை* நாடிச்சென்று, - மோனா நிலைதனை நானா வகையிலும் ஓதா
மெளன நிலையை, பலவகைகளிலும் கற்று, - நெறிமுறை முதல்கூறும்
நன்னெறி வகைகளைக் காட்டுகின்ற - லீலா விதம் உனதாலே கதிபெற
உனது பலவகையான விளையாட்டுக்களை உன்னருளாலே யான் கண்டு முக்தி பெற, - நேமா ரகசிய வுபதேசம்
ஒழுக்க விதிக்கு உட்பட்ட ரகசிய உபதேசத்தின் - பலமது தருவாயே
பயன்தனை எனக்கு அருள்வாயாக. - நீடூழிதனிலை வாடா மணியொளி நீதா
நீண்ட ஊழிக்காலத்தும் (எப்போதும்) தன் நிலை வாடாத சுயம்பிரகாச மணி ஜோதியே, நீதிமானே, - நாலா ருசியமுதாலே
பலவகையான இன்பச் சுவையமுதம் பருகிய உணர்ச்சியாலே, - திருமறை நாலாயது செப மணிமாலை
அழகிய வேதங்கள் நான்கையும், ஜெபமணிமாலை கொண்டு - நாடாய் தவரிடர் கேடா
நாடிச் சென்று ஆராயும் தவ சிரேஷ்டர்களின் துன்பங்களை அழிப்பவனே, - அரிகரி நாரா யணர்திரு மருகோனே
ஹரி ஹரி என்று ஓதப்படும் நாராயணரின், லக்ஷ்மியின் மருமகனே, - சூலா திபர்சிவ ஞானார்
சூலாயுதம் ஏந்திய தலைவரும், சிவஞானத்தினரும், - யமனுதை காலார்
காலனை உதைத்த திருவடியினருமான சிவபெருமான் - தரவரு குருநாதா
தந்தருள வந்த குருமூர்த்தியே, - தோதீ திகுதிகு தீதீ செக
தோதீ திகுதிகு தீதீ செக என்ற தாளத்தில் - செக சோதீ நடமிடு பெருமாளே.
ஜெகஜ்ஜோதியாக நடனம் செய்யும் பெருமாளே.