தத்ததன தானனத் தத்ததன தானனத்
தத்ததன தானனத் ...... தனதான
முத்துமணி யாரமொய்த் திட்டஇரு கோடுமுற்
பட்டகரி போலுமத் ...... தனமாதர்
முற்றுமதி யார்முகத் துற்றமுனை வேலுறப்
பட்டுமுகில் போல்மனத் ...... திருள்மூடிச்
சுத்தமதி போய்வினைத் துட்டனவ னாய்மனத்
துக்கமுற வேமிகச் ...... சுழலாதே
சொற்கள்பல நாவினிற் றொட்டுனிரு தாடொழச்
சொற்கமல வாழ்வுசற் ...... றருள்வாயே
கொத்துமுடி யானபத் தற்றுவிழ வேகுறிப்
புற்றஅதி கோபனச் ...... சுதன்மாயன்
கொற்றமரு காகுறக் கொச்சைமற மாதினுக்
கிச்சைமொழி கூறுநற் ...... குமரேசா
பத்தியுட னேநினைத் தெத்துமடி யார்வினைப்
பற்றுவிடு மாமறைப் ...... பொருளானாய்
பத்திவர ஞானசொற் கற்றவர்கள் பாடுநற்
பக்ஷபத தேவர்மெய்ப் ...... பெருமாளே.
- முத்து மணி ஆரம் மொய்த்திட்ட இரு கோடும் முற்பட்ட கரி
போலும் அத் தன மாதர்
முத்தாலும், ரத்தினத்தாலும் ஆன மாலைகள் நெருங்கியுள்ள இரண்டு மலைகள் போலவும், எதிர்த்து வரும் யானைகள் போலவும் உள்ள அந்த மார்பகங்களை உடைய விலைமாதர்களின் - முற்று மதி ஆர் முகத்து உற்ற முனை வேல் உறப் பட்டு முகில்
போல் மனத்து இருள் மூடி
பூரண சந்திரன் போன்ற முகத்தில் உள்ள கூரிய வேல் போன்ற கண்களால் தாக்கப்பட்டு, கரிய மேகம் போல் மனத்தில் அஞ்ஞான இருள் வந்து மூடி, - சுத்த மதி போய் வினைத் துட்டன் அவனாய் மனத் துக்கம்
உறவே மிகச் சுழலாதே
தெளிவான தூய அறிவு போய் செயலில் துஷ்டத்தனம் உடையவனாய், மனத்தில் துக்கம் கொண்டவனாய் மிகவும் கலக்கம் உறாமல், - சொற்கள் பல நாவினில் தொட்டு உன் இரு தாள் தொழச்
சொல் கமல வாழ்வு சற்று அருள்வாயே
பல வகையான சொற்களை நாவால் தொடுத்து, பாடித் துதித்து, உனது இரு திருவடிகளைத் தொழ, புகழ் மிக்க தாமரைப் பாதங்களை கொஞ்சம் தயை புரிந்து அருள் செய்வாயாக. - கொத்து முடியான பத்து அற்று விழவே குறிப்பு உற்ற அதி
கோபன் அச்சுதன் மாயன் கொற்ற மருகா
(ராவணனுடைய) கொத்தாக இருந்த பத்துத் தலைகளும் அறுபட்டு விழ, குறி வைத்து அம்பு எய்த, மிக்க கோபம் கொண்டவனாகிய அச்சுதனாம் ராமன், மாயவனின் (திருமாலின்) வீரம் வாய்ந்த மருகனே, - குறக் கொச்சை மற மாதினுக்கு இச்சை மொழி கூறு நல்
குமரேசா
குறக் குலத்துச் சாதாரண வேட்டுவப் பெண்ணாம் வள்ளிக்கு காம இச்சை காட்டும் பேச்சுக்களைப் பேசிய நல்ல குமரனே, - பத்தியுடனே நினைத்து எத்தும் அடியார் வினைப் பற்று
விடு(ம்) மா மறைப் பொருள் ஆனாய்
பக்தியுடன் உன்னைத் தியானித்துப் போற்றும்அடியார்களுடைய வினைப் பற்றைப் போக்க வல்ல சிறந்த வேதப் பொருள் ஆனவனே, - பத்தி வர ஞானம் சொல் கற்றவர்கள் பாடு நல் பக்ஷபத தேவர்
மெய்ப் பெருமாளே.
பக்தி, சிறந்த ஞானம் இவைகளைக் கொண்ட சொற்களைக் கற்றவர்கள் பாடுகின்ற நல்ல அன்புக்கு உரியவனே, தேவர்களின் உண்மைப் பொருளான பெருமாளே.