தானதன தனத்ததந்த, தானதன தனத்ததந்த
தானதன தனத்ததந்த ...... தனதான
மாதர்மயல் தனிற்கலந்து காமபனி யெனப்புகுந்து
மாடவிய லெனச்சுழன்று ...... கருவூறி
மாறிபல வெனச்சுமந்து தேனுகுட மெனத்திரண்டு
மாதமிது வெனத்தளர்ந்து ...... வெளியாகி
வேதபுவி தனிற்கழன்று ஏனமென வெனத்தவழ்ந்து
வீறுமணி களைப்புனைந்து ...... நடைமேலாய்
வேணவித மெனத்திரிந்து நாறுபுழு குடற்றிமிர்ந்து
வேசிவலை தனிற்கலந்து ...... மடிவேனோ
ஆதிசர ணெனக்கயங்கு லாவமுத லையைக்கிடங்கி
லாரவுடல் தனைப்பிளந்த ...... அரிநேமி
ஆமைகய லெனச்செயங்கொள் கோலகுற ளரித்தடங்கை
யானஅர வணைச்சயந்தன் ...... மருகோனே
சோதியுரு வெனத்திரண்டு கோலஅரு ணையிற்கலந்த
சோமனணி குடிற்சிலம்ப ...... னருள்பாலா
தோகைமயி லெனச்சிறந்த ரூபிகுற மகட்கிரங்கி
தோள்களிறு கிடப்புணர்ந்த ...... பெருமாளே.
- மாதர் மயல் தனில் கலந்து காம பனி எனப் புகுந்து
பெண்ணோடு காம மயக்கத்தில் ஈடுபட்டு, அன்பினால் ஏற்பட்ட பனி போல ஒரு துளி உட்சென்று, - மாட(ம்) இயல் எனச் சுழன்று கரு ஊறி
ஓர் உளுந்து போலச் சுழற்சி உற்று, கர்ப்பத்தில் ஊறி, - மாறி பல(லா) எனச் சுமந்து தேனு குடம் எனத் திரண்டு
உருவம் மாறுதல் ஏற்பட்டு, பலாப் பழம் போல ஆன வயிற்றைச் சுமந்து, பசுவின் பனிக்குடம் போலப் பருத்து, - மாதம் இது எனத் தளர்ந்து வெளி ஆகி வேத புவி தனில்
கழன்று
பேறு காலம் வந்தது என்று கூற, வயிறு தளர்ந்து, குழந்தையாக வெளிப்பட்டு, வேதத்தில் சொல்லப்பட்ட இந்தப் பூமியில் விழுந்து பிறந்து, - ஏனம் என எனத் தவழ்ந்து வீறு மணிகளைப் புனைந்து நடை
மேலாய்
பன்றிக்குட்டி புரள்கிறது போல உள்ளது என்று சொல்லும்படித் தவழ்ந்து, ஒளி வீசும் மணிகளை, அணிந்து கொண்டு, நடைகள் மிகவும் பழகி, - வேண விதம் எனத் திரிந்து நாறு புழுகு உடல் திமிர்ந்து வேசி
வலை தனில் கலந்து மடிவேனோ
மனம் போன போக்கின்படிப் பலவகையாகத் திரிந்து, நறுமணம் வீசும் புனுகு வாசனைப் பண்ட வகைகளை உடலில் பூசி, விலைமாதர்களின் வலையில் அகப்பட்டு இறந்து படுவேனோ? - ஆதி சரண் எனக் கயம் குலாவு அ(ம்) முதலையைக் கிடங்கில்
ஆர உடல் தனைப் பிளந்த அரி நேமி
ஆதி மூலமே, அடைக்கலம் என்று (கஜேந்திரன் என்னும்) யானை கொண்டாடிக் கூப்பிட, (அதைப் பற்றி நின்ற) முதலையை மடுவில் உடலை நன்றாகப் பிளந்த சக்கரத்தை ஏந்திய திருமால், - ஆமை கயல் எனச் செயம் கொள் கோல குறள் அரித்தடங்கை
யான அரவணை சயந்தன் மருகோனே
ஆமை, கயல் மீன் என்றும், வெற்றி கொண்ட பன்றி, வாமனர், விசாலமான கைகள் உடைய நரசிங்கம் என்றும் அவதாரங்கள் எடுத்த திருமால், பாம்பு அணையில் பள்ளி கொண்டவன் ஆகிய திருமாலின் மருகனே, - சோதி உரு எனத் திரண்டு கோல அருணையில் கலந்த
சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா
ஜோதி உருவத்துடன் பிழம்பாக, அழகிய திருவண்ணாமலையில் தோன்றி நின்றவனும், நிலவை (சடையில்) அணிந்தவனுமான, கயிலை மலைவாசன் ஆகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, - தோகை மயில் எனச் சிறந்த ரூபி குற மகட்கு இரங்கி
தோள்கள் இறுகிடப் புணர்ந்த பெருமாளே.
கலாபம் கொண்ட மயில் போல விளங்கும் உருவத்தினளாகிய குறப் பெண் வள்ளியிடம் பேரன்பு வைத்து, தோள்களை அழுந்த அணைத்து, அவளுடன் சேர்ந்த பெருமாளே.