திருப்புகழ் 1271 மன நூறு கோடி (பொதுப்பாடல்கள்)

தனதான தான தந்த தனதான தான தந்த
தனதான தான தந்த ...... தனதான
மனநூறு  கோடி  துன்ப  நொடிமீதி  லேநி  னைந்து 
மதனூட  லேமு  யங்கி  ......  யதிரூப 
மடமாத  ராசை  கொண்டு  புவிமீதி  லேம  யங்கி 
மதிசீரெ  லாம  ழிந்து  ......  கொடிதான 
வினைமூடி  யேதி  ரிந்து  புவிமீதி  லேயு  ழன்று 
விரகான்மெ  யேத  ளர்ந்து  ......  விடுநாளில் 
விசையான  தோகை  துங்க  மயிலேறி  யோடி  வந்து 
வெளிஞான  வீடு  தந்து  ......  அருள்வாயே 
தினைவேடர்  காவல்  தங்கு  மலைகாடெ  லாமு  ழன்று 
சிறுபேதை  கால்ப  ணிந்த  ......  குமரேசா 
திரையாழி  சேது  கண்டு  பொருராவ  ணேசை  வென்ற 
திருமால்மு  ராரி  தங்கை  ......  யருள்பாலா 
முனிவோர்கள்  தேவ  ரும்பர்  சிறையாக  வேவ  ளைந்த 
முதுசூரர்  தானை  தங்கள்  ......  கிளையோடு 
முடிகோடி  தூளெ  ழுந்து  கழுகோடு  பாற  ருந்த 
முனைவேலி  னாலெ  றிந்த  ......  பெருமாளே. 
  • மனநூறு கோடி துன்ப நொடிமீதிலே நினைந்து
    மனத்திலே நூறு கோடிக்கணக்கான துன்பங்கள் ஒரு நொடிப் பொழுதிலே நினைந்து,
  • மதனூடலே முயங்கி
    மன்மதனது லீலையால் காம ஊடலிலே ஈடுபட்டு,
  • அதிரூப மடமாதராசை கொண்டு
    மிக்க அழகுள்ள இளம் பெண்களிடத்தில் ஆசை கொண்டு,
  • புவிமீதிலே மயங்கி
    இந்தப் புவிமீதிலே மயங்கிக் கிடந்து,
  • மதிசீரெலாம் அழிந்து
    அறிவு, மதிப்பு எல்லாம் கெட்டு,
  • கொடிதான வினைமூடியே திரிந்து
    கொடுமையான தீவினை மூடித்திரிந்து,
  • புவிமீதிலே யுழன்று
    இவ்வுலகில் பல இடத்திலும் அலைந்து,
  • விரகான்மெயே தளர்ந்து விடுநாளில்
    அப்பெண்களின் தந்திரச் செயல்கள் காரணமாக உடல் தளர்ந்து போய்விடுகின்ற அந்த நாளில்,
  • விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்து
    வேகம் வாய்ந்த தோகையுடன் கூடிய பெருமைமிக்க மயிலில் ஏறி, விரைவில் வந்து,
  • வெளிஞான வீடு தந்து அருள்வாயே
    பரவெளியாம் ஞான முக்தியினை நீ தந்தருள்வாயாக.
  • தினைவேடர் காவல் தங்கு மலைகாடெலாம் உழன்று
    தினைப்புனத்தில் வேடர்களின் காவல் உள்ள மலைப் புறம், காட்டுப் புறம் எல்லாம் திரிந்து,
  • சிறுபேதை கால்பணிந்த குமரேசா
    சிறு பேதைப் பெண்ணாகிய வள்ளியின் அடிகளில் பணிந்த குமரேசனே,
  • திரையாழி சேது கண்டு பொரு ராவணேசை வென்ற
    அலைகள் வீசும் சமுத்திரத்தில் அணைகட்டி, போருக்கு வந்த ராவணேசனை வெற்றிகொண்ட
  • திருமால்மு ராரி தங்கை யருள்பாலா
    (ராமனாம்) திருமாலின், முரன் என்ற அசுரனைக் கொன்ற முராரியின், தங்கை பார்வதி அருளிய பாலனே,
  • முனிவோர்கள் தேவர் உம்பர் சிறையாகவே வளைந்த
    முநிவர்கள், தேவர்கள், விண்ணுலகத்தார் அனைவரையும் வளைத்துச் சிறைசெய்த
  • முதுசூரர் தானை தங்கள் கிளையோடு
    கொடிய சூரர்களின் சேனைகளை, அவர்களின் சுற்றமுடன்
  • முடிகோடி தூளெழுந்து கழுகோடு பாறருந்த
    அவர்களின் தலைகள் சிதறி கோடிக்கணக்கான தூள்களாகப் பறக்க, அவற்றை கழுகுகளும் பருந்துகளும் உண்ண,
  • முனைவேலினால் எறிந்த பெருமாளே.
    வேலின் முனையினால் அழித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com