தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
தனந்தாத் தனத்தம் ...... தனதான
மலந்தோற் சலந்தேற் றெலும்பாற் கலந்தீட்
டிடுங்கூட் டினிற்றங் ...... கிடுமாய
மயங்காத் தியங்காப் பயங்கோட் டிடுங்காற்
றுடன்போக் குறத்தந் ...... தையுமாதும்
குலந்தாய்க் குடம்பாற் பிறந்தேற் றிடுங்கோத்
தடங்கூப் பிடத்தம் ...... புவியாவும்
குலைந்தார்ப் பெழுங்காட் டிலந்தாட் களன்பாற்
குணங்காத் துனைக்கும் ...... பிடஆளாய்
தலந்தாட் டொடண்டாத் தளைந்தார்க் கிளங்காத்
தடந்தாட் புடைத்தன் ...... பினர்வாழத்
தருங்கூத் தரும்பார்த் துகந்தேத் திடஞ்சாத்
திரஞ்சாற் றிநிற்கும் ...... பெருவாழ்வே
அலைந்தாற் றெழுங்கோச் சலந்தீக் கலந்தாட்
டரம்போச் செனக்கன் ...... றிடும்வேலா
அறங்காத் துறங்காத் திறம்பார்த் திருந்தோர்க்
கயர்ந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே.
- மலம் தோல் சலம் தேற்று எலும்பால் கலந்து ஈட்டிடும்
கூட்டினில் தங்கிடு மாயம்
மலம், தோல், நீர் ஆகியவைகளும், செறிந்துள்ள எலும்பு இவைகளும் கலந்து கூட்டப்பட்ட கூடாகிய இந்த உடம்பில் தங்கியிருக்கும் மாய வாழ்க்கையில், - மயங்காத் தியங்காப் பயம்(ன்) கோட்டிடும் காற்றுடன்
போக்குற
மயங்கியும், சஞ்சலப்பட்டும், பயன் தர வைக்கப்பட்ட பிராண வாயுவுடன் நீங்க (உடலை விட்டு விலக), - தந்தையு(ம்) மாதும் குலம் தாய்க்கு உடம்பால் பிறந்து
ஏற்றிடும் கோத்து அடம் கூப்பிட
தந்தையும், மனைவியும், சிறந்த தாயுடன், கூடப் பிறந்தவர்களாய் விளங்கும் கூட்டத்தினர் (உறவினர்கள்) மிகப் பலமாய்க் கூப்பிட, - தம் புவி யாவும் குலைந்து ஆர்ப்பு எழும் காட்டில்
தாம் வாழ்ந்த இடத்தில் உள்ள யாவரும் உள்ளம் சோர்வுற்று அழுகை ஓசை எழும் சுடுகாட்டிலும், - அம் தாள்கள் அன்பால் குணம் காத்து உனைக் கும்பிட
ஆளாய்
(உனது) அழகிய திருவடிகளை அன்புடனே நல்ல குணத்துடன் மனதில் இறுத்தி, உன்னைக் கும்பிட்டு வணங்கும்படி என்னை ஆட்கொண்டருளுக. - தலம் தாள் தொடு அண்டாத் தளைந்தார்க்கு
திருவடியாகிய இடத்தைத் தொட்டு, நெருங்கிக் கட்டிப் பிடித்த அடியவர்களுக்கும், - இளங்காத் தடம் தாள் புடைத்த அன்பினர் வாழத் தரும்
கூத்தரும் பார்த்து உகந்து ஏத்திட
இளம் பூஞ்சோலை, குளிர்ந்த பொய்கை ஆக விளங்கும் திருவடியை ஆரவாரத்துடன் போற்றிய அன்பர்களுக்கும் வாழ்வுறும்படி உதவுகின்ற கூத்தப் பெருமானும் கண்டு மகிழ்ந்து போற்றி செய்ய, - அம் சாத்திரம் சாற்றி நிற்கும் பெரு வாழ்வே
அழகிய ஞானநூலை சிவனாருக்கு உபதேசித்து நின்ற பெருஞ் செல்வமே, - அலைந்த ஆற்று எழும் கோச் சலம் தீக் கலந்து ஆள் தரம்
போச்சு எனக் கன்றிடும் வேலா
வெள்ள நீர் அசைந்து ஆற்றில் எதிர்ந்து எதிரே வந்த உனது சொல் (நீ திருஞான சம்பந்தராக எழுதிவிட்ட திருப்பாசுர ஏட்டின் பெருமையைக் கண்டு) நீரிலும், நெருப்பிலும் (சபதம் செய்து போட்டியில்) கலந்து, நமது ஆண்மையும் தொலைந்தது என்று (சமணர்கள்) சொல்லும்படி (அவர்களைக்) கோபித்த வேலனே, - அறம் காத்து உறங்காத் திறம் பார்த்து இருந்தோர்க்கு
அயர்ந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே.
தரும நெறியைக் காப்பாற்ற, தூங்காமலும் சோர்வு அடையாமலும் இருக்கும் வகையைக் கண்டிருந்த பெரியோர்களுக்கும், (உன்னைப்) பூஜித்து வழிபடுவோர்களுக்கும் (வரங்களைத்) தருகின்ற பெருமாளே.