திருப்புகழ் · 1269மதிதனையிலாத (பொதுப்பாடல்கள்)

தனதன தனான தான தனதன தனான தான
தனதன தனான தான ...... தனதான

murugan thiruppugazh

மதிதனை யிலாத பாவி குருநெறி யிலாத கோபி
மனநிலை நிலாத பேயன் ...... அவமாயை
வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி
வரும்வகை யிதேது காய ...... மெனநாடும்
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை
வினையிகல் விடாத கூள ...... னெனைநீயும்
மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக
மிகுமுன துரூப தான ...... மருள்வாயே
எதிர்வரு முதார சூர னிருபிள வதாக வேலை
யியலொடு கடாவு தீர ...... குமரேசா
இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் நாளும்
இளமையது தானு மாக ...... நினைவோனே
நதியுட னராவு பூணு பரமர்குரு நாத னான
நடைபெறு கடூர மான ...... மயில்வீரா
நகைமுக விநோத ஞான குறமினுட னேகு லாவு
நவமணி யுலாவு மார்ப ...... பெருமாளே.

பத உரை

  • மதிதனை யிலாத பாவி
    அறிவு என்பதே இல்லாத பாவி,
  • குருநெறி யிலாத கோபி
    குரு சொன்ன வழியில் நிற்காத சினமுள்ளவன்,
  • மனநிலை நிலாத பேயன்
    மனம் ஒரு நிலையில் நிற்காத பேய் போன்று அலைபவன்,
  • அவமாயை வகையது விடாத பேடி
    பயனற்ற மாயையின் பொய்யான போக்குக்களை விடாத பேடி,
  • தவநினைவிலாத மோடி
    தவம் என்ற நினைப்பே இல்லாத முரடன்,
  • வரும்வகை யிதேது காயமெனநாடும் விதியிலி
    இந்த உடம்பு எப்படிப் பிறந்தது என்று ஆராயும் பாக்கியம் இல்லாதவன்,
  • பொலாத லோபி
    மிகக் கொடிய கஞ்சன்,
  • சபைதனில் வராத கோழை
    சபைகளில் வந்து பேசும் தைரியம் இல்லாதவன்,
  • வினையிகல் விடாத கூளனெனைநீயும்
    தீவினையின் வலிமையை நீக்கமாட்டாத பயனற்றவன் ஆகிய என்னை நீயும்
  • மிகுபரம் அதான ஞான நெறிதனை விசாரமாக
    மிக மேலான ஞானமார்க்கத்தை ஆராய்ச்சி செய்ய
  • மிகுமுனது ரூப தானம் அருள்வாயே
    மிக்கு விளங்கும் உன்னுடைய சாரூபம் (வடிவ தரிசனம்) என்ற பரிசை அடியேனுக்குத் தந்தருள்க.
  • எதிர்வரும் உதார சூரன் இருபிள வதாக வேலை
    எதிர்த்து வந்த மிக்க வலிய சூரன் இரண்டு பிளவாகும்படியாக வேலாயுதத்தை
  • இயலொடு கடாவு தீர குமரேசா
    தக்க முறையில் செலுத்தின தீரனே, குமரேசனே,
  • இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல்
    இனிய சொற்களையே மறக்காமல் பேசும் பெரியோர்கள் மீண்டும் கருவழியடைந்து பிறவாதபடியும்,
  • நாளும் இளமையது தானு மாக நினைவோனே
    எப்போதும் இளமையுடன் விளங்கும்படியும், நினைத்து அருள் செய்பவனே,
  • நதியுடன் அராவு பூணு பரமர்குரு நாதனான
    கங்கைநதியுடன், பாம்பையும் அணிந்த பரமேசுரர் சிவபெருமானுக்கு குருமூர்த்தியானவனே,
  • நடைபெறு கடூர மான மயில்வீரா
    நடையிலேயே கடுமையான வேகம் காட்டும் மயிலையுடைய வீரனே,
  • நகைமுக விநோதஞான குறமினுடனேகுலாவு
    சிரித்த முகத்தாளும், அற்புத ஞானத்தைக் கொண்டவளுமான குறப் பெண் வள்ளியுடன் கொஞ்சுகின்றவனே,
  • நவமணி யுலாவு மார்ப பெருமாளே.
    நவரத்தின மாலை விளங்கும் மார்பை உடைய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout