தனனத் தனதன தனனத் தனதன
தனனத் தனதன ...... தனதான
மதனிக் கதுகொடு பதுமப் புதுமலர்
மலையப் படவிடு ...... வலியாலே
வனமுற் றினவளை யினநித் திலமலை
வலையத் துகள்வளை ...... கடலாலே
விதனப் படுமதி வதனக் கொடியற
வெருவிப் பரிமள ...... அணைமீதே
மெலியக் கலைதலை குலையத் தகுமினி
விரையக் குரவலர் ...... தரவேணும்
புதனைச் சதுமுக விதியச் சுதனெதிர்
புனைவித் தவர்தொழு ...... கழல்வீரா
பொருகைச் சரிவரி பெருகச் செறிவுறு
புனமெய்க் குறமகள் ...... மணவாளா
முதுநற் சரவண மதனிற் சததள
முளரிப் பதிதனி ...... லுறைவோனே
முதுமைக் கடலட ரசுரப் படைகெட
முடுகிப் பொரவல ...... பெருமாளே.
- மதன் இக்கு அது கொடு பதுமப் புது மலர் மலையப் பட விடு
வலியாலே
மன்மதன் கரும்பு வில்லைக் கொண்டு புதிய தாமரை மலர் அம்பை (என் மகள் மீது) பகைத்து எய்ததால் ஏற்பட்ட வலியாலும், - வனம் முற்றின வளை இன(ம்) நித்தில மலை வலையத்து
உகள் வளை கடலாலே
அழகு நிறைந்த சங்குகளின் கூட்டமான முத்துக்கள் அலைகளாகிய வட்டச் சுழலில் சிதறி விழுகின்ற, வளைந்துள்ள கடலாலும், - விதனப் படு(ம்) மதி வதனக் கொடி அற வெருவிப் பரிமள
அணை மீதே
துயரப்படும் நிலவு போன்ற முகத்தை உடைய, வஞ்சிக் கொடி போன்ற என் பெண் மிகவும் அச்சம் அடைந்து, நறுமணம் உள்ள படுக்கையின் மேல் (தூக்கமின்றி) - மெலியக் கலை தலை குலையத் தகும் இனி விரையக் குர
அலர் தர வேணும்
மெலிந்து போதலும், ஆடையும் தலைக் கூந்தலும் குலைந்து போதலும் தகுமோ? இனிமேல் வாசம் மிக்க குர மாலையை நீ தந்தருள வேண்டும். - புதன் ஐச் சது முக விதி அச்சுதன் எதிர் புனைவித்தவர்
தொழு கழல் வீரா
புதனுடைய தந்தையாகிய சந்திரனை, நான்முக பிரமன், திருமால் (இவர்களின்) எதிரே சூடிக் கொண்டவராகிய சிவபெருமான் தொழுகின்ற திருவடியை உடைய வீரனே, - பொரு கைச் சரி வரி பெருகச் செறிவுறு புனம் மெய்க் குற
மகள் மணவாளா
பொருந்திய கையில் வளையல்களை வரிசையாக அடுக்கியவளும், நெருங்கி வளர்ந்துள்ள பயிர்கள் உள்ள தினைப் புனத்தில் இருந்தவளும், உண்மை நிறைந்த குறப் பெண்ணுமாகிய வள்ளியின் கணவனே, - முது நல் சரவணம் அதனில் சத தள முளரிப் பதி தனில்
உறைவோனே
பழைய நல்ல சரவணப் பொய்கையில் நூறு இதழ்களைக் கொண்ட தாமரையின் மேலும், பொற்றாமரைப் பதியாகிய மதுரையிலும் வீற்றிருப்பவனே, - முதுமைக் கடல் அடர் அசுரப் படை கெட முடுகிப் பொர
வ(ல்)ல பெருமாளே.
பழைய கடலில் நெருங்கியிருந்த அசுரர்கள் சேனைகள் கெட்டு அழிய, விரைவில் சென்று சண்டை செய்ய வல்ல பெருமாளே.