தனந்தா தனந்தா தனந்தா தனந்தா
தனந்தா தனந்த ...... தனதான
பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால்
ப்ரியங்கூர வந்து ...... கருவூறிப்
பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார்
நடந்தார் தளர்ந்து ...... பிணமானார்
அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள்
அலங்கார நன்றி ...... தெனமூழ்கி
அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால்
அலந்தேனை யஞ்ச ...... லெனவேணும்
இருங்கா னகம்போ யிளங்கா ளைபின்போ
கவெங்கே மடந்தை ...... யெனவேகி
எழுந்தே குரங்கா லிலங்கா புரந்தீ
யிடுங்கா வலன்றன் ...... மருகோனே
பொருங்கார் முகம்பா ணிகொண்டே யிறைஞ்சார்
புறஞ்சாய அம்பு ...... தொடும்வேடர்
புனங்கா வலங்கோ தைபங்கா வபங்கா
புகழ்ந்தோது மண்டர் ...... பெருமாளே.
- பெருங்காரியம்போல் வரும்
பெரிய காரியத்தைச் சாதிக்க வந்ததுபோல வந்துள்ளதும், - கேடுடம்பால் ப்ரியங்கூர வந்து
எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாகிய இந்த உடம்பின்மீது ஆசைப்படும்படி வந்து, - கருவூறிப் பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார்
கருவில் ஊறிப் பிறந்தார் என்றும், படுத்திருந்தார் என்றும், இருந்தார் என்றும், தவழ்ந்தார் என்றும், - நடந்தார் தளர்ந்து பிணமானார்
நடந்தார் என்றும், தளர்ந்து பிணமானார் என்றும் கூற இடமானதும், - அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள்
அரிய சுடுகாட்டின் அருகே எடுத்துக்கொண்டு செல்லுங்கள் என்றும், அங்கே உடலைச் சுடுங்கள் என்றும் (சிலர் கூறத் தொடங்க), - அலங்கார நன்றிது எனமூழ்கி அகன்று
பிணத்திற்கு அலங்காரம் நன்றாய் அமைந்தது என்றும் சிலர் கூறி, பிணம் எரிந்ததும் நீரில் மூழ்கி, - ஆசையும்போய் விழும்பாழுடம்பால்
இருந்த ஆசையையும் பாசத்தையும் மறந்து செல்ல, விழுந்து பாழாகும் இந்த உடம்பைக் காரணமாக வைத்து - அலந்தேனை யஞ்சலெனவேணும்
மனம் கலங்கி எங்கும் அலைந்து திரிந்த என்னை அஞ்சாதே என்று கூறி நீ வரவேண்டும். - இருங்கானகம்போய் இளங்காளைபின்போக
பெரிய காட்டிற்குச் சென்று, இளைய வீரனாம் தம்பி லக்ஷ்மணன் பின் தொடர, - எங்கே மடந்தை யெனவேகி எழுந்தே
(காணாது போன) மாது சீதை எங்கே என்று தேடிச் சென்று புறப்பட்டு, - குரங்கால் இலங்கா புரந்தீ யிடும்
அநுமார் என்னும் குரங்கின் மூலம் இலங்காபுரியில் நெருப்பை வைத்த - காவலன்றன் மருகோனே
அரசனான ராமபிரானின் மருகனே, - பொருங்கார்முகம் பாணிகொண்டே
போர் செய்யும் வில்லைக் கையில் கொண்டவர்களாய், - இறைஞ்சார் புறஞ்சாய அம்பு தொடும்வேடர்
தம்மை மதிக்காதவர்களின் வீரம் அழியும்படி அம்பைச் செலுத்தவல்ல வேடர்களுடைய - புனங்காவல் அங்கோதைபங்கா அபங்கா
தினைப்புனத்தைக் காவல் செய்த அழகிய பெண் வள்ளியின் மணாளனே, குறைவொன்றும் இல்லாதவனே, - புகழ்ந்தோதும் அண்டர் பெருமாளே.
உன்னைப் புகழ்ந்து துதிக்கும் தேவர்களுடைய பெருமாளே.