தானன தானன தந்த தானன தானன தந்த
தானன தானன தந்த ...... தனதான
பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து
பூசைகள் யாதுநி கழ்ந்து ...... பிழைகோடி
போம்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு
பூரணி காரணி விந்து ...... வெளியான
நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து
ஞானசு வாசமு ணர்ந்து ...... வொளிகாண
நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த
நாயகர் பாதமி ரண்டு ...... மடைவேனோ
மாதுசர் வேஸ்வரி வஞ்சி காளிபி டாரிவி பஞ்சி
வாணிவ ராகிம டந்தை ...... யபிராமி
வாழ்சிவ காமச வுந்த்ரி யாலமெ லாமுக பஞ்ச
வாலைபு ராரியி டந்த ...... குமையாயி
வேதபு ராணம்வி ளம்பி நீலமு ராரியர் தங்கை
மேலொடு கீழுல கங்கள் ...... தருபேதை
வேடமெ லாமுக சங்க பாடலொ டாடல்ப யின்ற
வேணியர் நாயகி தந்த ...... பெருமாளே.
- பூத கலாதிகள் கொண்டு யோகமும் ஆக மகிழ்ந்து பூசைகள்
யாது நிகழ்ந்து பிழை கோடி போம் வழி ஏது தெரிந்து
ஐம்பூதங்களின் சம்பந்தமான சாஸ்திரங்கள் முதலானவைகளை ஆய்ந்தறிந்து, யோகவகை கூடிட மகிழ்ந்து, பூஜைகள் யாவற்றையும் செய்து, கோடிக் கணக்கான பிழைகள் நீங்கும்படியான வழி இன்னதென்று காரணம் உணர்ந்து, - ஆதி அநாதி இரண்டு பூரணி காரணி விந்து வெளியான
நாத பராபரம் என்ற யோகி உ(ல்)லாசம் அறிந்து
முதலும், முதலற்றதுமாய் உள்ள இரண்டுமாய் நிற்கின்ற முழு முதல்வி, சகலத்துக்கும் ஆதி காரணமாக இருப்பவளாகிய பரா சக்தியும், விந்து வெளியான நாதம் (விந்து சம்பந்தமான நாத ஒலி கூடி முழங்கும் இடத்தில்) பரம் பொருளாகக் காட்சி தர, யோகிகள் காணும் அந்த பரமானந்த ஒளியை அறிந்து அனுபவித்து, - ஞான சுவாசம் உணர்ந்து ஒளி காண நாடி ஒரு ஆயிரம்
வந்த தாமரை மீதில் அமர்ந்த நாயகர் பாதம் இரண்டும்
அடைவேனோ
ஞான மூச்சினால் யோக நிலையை அறிந்து நாத நல்லொளி தோன்ற, அதை விரும்பி, ஓராயிரம் இதழோடு கூடிய குரு கமலத்தின் மீது அமர்ந்துள்ள பெருமானது* இரண்டு திருவடிகளை அடைவேனோ? - மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி வாணி வராகி
மடந்தை அபிராமி
மாது, எல்லாவற்றுக்கும் ஈசுவரி, வஞ்சிக் கொடி போன்றவள், காளி, பிடாரி, விபஞ்சி என்னும் வீணையை ஏந்திய சரசுவதி, சக்தி, பேரழகியான மடந்தை, அபிராமி - வாழ் சிவகாம சவுந்த்ரி ஆலம் மெ(மே) லாம் முக பஞ்ச
வாலை புராரி இடந்தகு உமையாயி
வாழ்வு பொலியும் சிவகாம செளந்தரி, பிரளய கால வெள்ளத்தின் மேலாகிய ஐந்து முகம் கொண்ட பாலாம்பிகை, திரிபுரத்தை எரித்த சிவனது இடது பாகத்துக்குத் தக்க பொருந்திய உமா தேவி ஆகிய எமது தாய், - வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை மேலொடு கீழ்
உலகங்கள் தரு(ம்) பேதை
வேதங்களையும், புராணங்களையும் சொன்னவள், முரன் என்னும் அசுரனுக்குப் பகைவனாகிய (முராரி என்னும்) நீலநிறத் திருமாலின் தங்கை, பதினான்கு உலகங்களையும் ஈன்று அளித்த மாது, - வேடம் எ(ல்)லாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற
வேணியர் நாயகி தந்த பெருமாளே.
(ஆடலுக்கு உரிய) வேடங்களெல்லாம் நிலை கலங்க, (பொற்)சபையில் பாடல்களுடனும் ஆடல்களும் பயின்ற சடையை உடைய சிவ பெருமானின் தேவி ஆகிய பார்வதி பெற்ற பெருமாளே.