திருப்புகழ் · 1263பிரமனும் விரகொடு (பொதுப்பாடல்கள்)

தனதன தனதன தனதன தனதன
தானத் தனந்தம் ...... தனதான

தினம் ஒரு திருப்புகழ் Dinam oru Thiruppugazh

பிரமனும் விரகொடு பிணிவினை யிடர்கொடு
பேணிக் கரங்கொண் ...... டிருகாலும்
பெறநிமிர் குடிலென வுறவுயிர் புகமதி
பேதித் தளந்தம் ...... புவியூடே
வரவிட வருமுட லெரியிடை புகுதரு
வாதைத் தரங்கம் ...... பிறவாமுன்
மரகத மயில்மிசை வருமுரு கனுமென
வாழ்க்கைக் கொரன்புந் ...... தருவாயே
அருவரை தொளைபட அலைகடல் சுவறிட
ஆலிப் புடன்சென் ...... றசுரேசர்
அனைவரு மடிவுற அமர்பொரு தழகுட
னாண்மைத் தனங்கொண் ...... டெழும்வேலா
இருவினை யகலிட எழிலுமை யிடமுடை
யீசர்க் கிடுஞ்செந் ...... தமிழ்வாயா
இயல்பல கலைகொடு இசைமொழி பவரினும்
ஏழைக் கிரங்கும் ...... பெருமாளே.

பத உரை

  • விரகொடு பிணிவினை இடர் கொடு பேணிக் கரம் கொண்டு இரு காலும் பெற
    சாமர்த்தியத்துடன் இணைந்து வரும் வினைகளின் துன்பங்களைக் கொண்டதாய், விருப்புடன் (இரண்டு) கைகளுடன் இரண்டு கால்களும் பெறும்படியாக
  • நிமிர் குடில் என உற உயிர் புக மதி பேதித்து அளந்து
    உயர்த்தப்பட்ட குடிசை போன்ற உடலில் பொருந்தும்படி உயிர் புகுந்து, அறிவு என்பது அவ்வுயிர்க்கு வேறுபாடாகும்படி கணக்கிட்டு,
  • அம் புவி ஊடே*பிரமனும் வர விட வரும் உடல் எரி இடை புகு தரு வாதைத் தரங்கம் பிறவா முன்
    உலகிடையே பிரமதேவனும் அனுப்பி வைக்க வந்து சேர்கின்ற உடல் (இறுதியில்) நெருப்பில் புகுந்தழியும் துன்பம் என்னும் அலை தோன்றுவதற்கு முன்,
  • மரகத மயில் மிசை வரு முருகனும் என வாழ்க்கைக்கு ஓர் அன்பும் தருவாயே
    பச்சை மயிலின் மேல் வருகின்ற முருகனே என்று கூறி வாழ்வதற்கு வேண்டிய ஒப்பற்ற ஓர் அன்பைத் தருவாயாக.
  • அரு வரை தொளை பட அலை கடல் சுவறிட ஆலிப்புடன் சென்ற அசுரேசர்
    அரிய மலையாகிய கிரெளஞ்சம் தொளைபட்டு அழிய, அலை வீசும் கடல் வற்றிப் போக, ஆரவாரத்துடன் போருக்குச் சென்ற அசுரர்கள்
  • அனைவரும் மடி உற அமர் பொருத அழகுடன் ஆண்மைத் தனம் கொண்டு எழும் வேலா
    எல்லோரும் மடிந்து அழிய சண்டை செய்து, அழகுடன் வீர பராக்கிரமம் விளங்க எழுந்த வேலாயுதனே,
  • இரு வினை அகலிட எழில் உமை இடம் உடை ஈசர்க்கு இடும் செம் தமிழ் வாயா
    (அடியார்களுடைய) இரு வினைகளும் நீங்கும்படி, அழகிய உமா தேவியை தமது இடது பாகத்தில் கொண்டுள்ளவரான சிவ பெருமானுக்கு (திருநெறித் தமிழ் என்னும் தேவாரத் தமிழைத் திருஞான சம்பந்தராக வந்து) புனைந்த திருவாயனே,
  • இயல் பல கலை கொடு இசை மொழிபவரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே.
    இயற்றமிழ் முதலான பல கலைகளுடன் இசைகளைப் பாடுபவர்களைக் காட்டிலும் ஏழையாகிய அடியேனுக்கு அதிக இரக்கம் காட்டும் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * முதல் வரியிலிருந்து பிரமனும் என்ற சொல் அன்வயப்படுத்தி உள்ளது.
  • * The word 'biramanum' from the first line is transposed here for proper meaning.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout