தான தனந்தன தான தனந்தன
தான தனந்தன ...... தனதான
பார நறுங்குழல் சோர நெகிழ்ந்துப
டீர தனம்புள ...... கிதமாகப்
பாவை யருந்தியல் மூழ்கி நெடும்பரி
தாப முடன்பரி ...... மளவாயின்
ஆர முதுண்டணை மீதி லிருந்தநு
ராகம் விளைந்திட ...... விளையாடி
ஆக நகம்பட ஆர முயங்கிய
ஆசை மறந்துனை ...... யுணர்வேனோ
நார தனன்றுச காய மொழிந்திட
நாய கிபைம்புன ...... மதுதேடி
நாண மழிந்துரு மாறி யவஞ்சக
நாடி யெபங்கய ...... பதநோவ
மார சரம்பட மோக முடன்குற
வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய்
மாமு நிவன்புணர் மானு தவுந்தனி
மானை மணஞ்செய்த ...... பெருமாளே.
- பார நறும் குழல் சோர நெகிழ்ந்து படீர தனம் புளகிதமாகப்
பாவையர் உந்தியில் மூழ்கி
பாரமானதும், நறு மணம் வீசுவதுமான கூந்தல் குலைய, சந்தனம் அணிந்துள்ள மார்பகம் கட்டுத் தளர்ந்து புளகிதம் கொள்ள, மாதர்களின் உதரத்தில் முழுகியவனாய், - நெடும் பரிதாபம் உடன் பரிமள வாயின் ஆர் அமுது உண்டு
அணை மீதில் இருந்து
மிக்க தாகத்துடன் நறு மணம் உள்ள வாயிதழில் நிறைந்த அமுதூறலைப் பருகி, படுக்கையில் இருந்து, - அநுராகம் விளைந்திட விளையாடி ஆக நகம் பட ஆரம்
முயங்கிய ஆசை மறந்து உனை உணர்வேனோ
காமப் பற்று உண்டாக லீலைகளைச் செய்து, உடலில் நகக்குறிகள் பட மிக நன்றாகத் தழுவிய வேசையர் ஆசையை மறந்து, உன்னை உணரும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ? - நாரதன் அன்று சகாய(ம்) மொழிந்திட நாயகி பைம்புனம்
அது தேடி
நாரத முனிவர் அந்நாளில் (வள்ளி சம்பந்தமான) உதவி மொழிகளை எடுத்துச் சொல்ல, வள்ளி நாயகி இருந்த பசுமையான தினைப் புனத்தைத் தேடிச் சென்று, - நாணம் அழிந்து உரு மாறிய வஞ்சகன்
கூச்சத்தையும் விட்டு (வேடன், விருத்தன், வேலன்) ஆகிய உருவம் எடுத்த தந்திரக்காரனே, - நாடியெ பங்கய பத(ம்) நோவ மார(ன்) சரம் பட மோகமுடன்
குற வாணர் குறிஞ்சியின் மிசையே போய்
விரும்பி, தாமரைத் திருவடிகள் நோக, மன்மதனின் மலர்ப்பாணங்கள் தைக்க, காம இச்சையுடன் குறவர்கள் வாழும் வள்ளிமலையின் மீது சென்று, - மா முநிவன் புணர் மான் உதவும் தனிமானை மணம் செய்த
பெருமாளே.
சிறந்த சிவமுனிவர் இணைந்ததால் லக்ஷ்மியாகிய மான் பெற்ற ஒப்பற்ற மான் போன்ற வள்ளியைத் திருமணம் செய்த பெருமாளே.