திருப்புகழ் 1266 மக்கள் பிறப்புக்குள் (பொதுப்பாடல்கள்)

தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த
தத்தத் தனத்தத்த ...... தனதான
மக்கட்  பிறப்புக்கு  ளொக்கப்  பிறப்புற்ற 
மட்டுற்  றசுற்றத்தர்  ......  மனையாளும் 
மத்யத்  தலத்துற்று  நித்தப்  பிணக்கிட்டு 
வைத்துப்  பொருட்பற்று  ......  மிகநாட 
நிக்ரித்  திடுத்துட்டன்  மட்டித்  துயிர்பற்ற 
நெட்டைக்  கயிற்றிட்டு  ......  வளையாமுன் 
நெக்குக்  குருப்பத்தி  மிக்குக்  கழற்செப்ப 
நிற்றத்  துவச்சொற்க  ......  ளருள்வாயே 
திக்கப்  புறத்துக்குள்  நிற்கப்  புகழ்ப்பித்த 
சித்ரத்  தமிழ்க்கொற்ற  ......  முடையோனே 
சிப்பக்  குடிற்கட்டு  மற்பக்  குறத்திச்சொல் 
தித்திப்  பையிச்சிக்கு  ......  மணவாளா 
முக்கட்  சடைச்சித்த  ருட்புக்  கிருக்கைக்கு 
முத்தித்  துவக்குற்று  ......  மொழிவோனே 
முட்டச்  சினத்திட்டு  முற்பட்  டிணர்க்கொக்கை 
முட்டித்  தொளைத்திட்ட  ......  பெருமாளே. 
  • மக்கள் பிறப்புக்குள் ஒக்கப் பிறப்பு உற்ற மட்டு உற்ற சுற்றத்தர் மனையாளும்
    மக்களாக எடுத்த பிறப்பில் கூடப் பிறந்துள்ள சுற்றம் என்னும் அளவில் உள்ள உறவினர்களும், மனைவியும்,
  • மத்(தி)யத் தலத்து உற்று நித்தப் பிணக்கிட்டு வைத்துப் பொருள் பற்று(ம்) மிக நாட
    (எனது) வாழ் நாளின் இடையில் வந்து சேர்ந்து, தினமும் மாறுபட்டுச் சண்டை இட்டு, சேகரித்து வைத்துள்ள பொருளைப் பறிக்கவே மிகவும் நாடி நிற்க,
  • நிக்(க)ரித்து இடு(ம்) துட்டன் மட்டித்து உயிர் பற்ற நெட்டைக் கயிற்று இட்டு வளையா முன்
    கொல்ல வரும் துஷ்டனாகிய யமன், அழித்து என் உயிரைப் பிடிக்க நீண்ட பாசக் கயிற்றினால் வீசி வளைப்பதற்கு முன்பாக,
  • நெக்குக் குருப் பத்தி மிக்குக் கழல் செப்ப நில் தத்துவச் சொற்கள் அருள்வாயே
    மனம் நெகிழ்ந்து, குரு பக்தி மிகுந்து, உன் திருவடிகளைப் புகழ்வதற்கு, நிலைத்து நிற்கும் தத்துவ அறிவுச் சொற்களை எனக்கு உதவி செய்து அருளுக.
  • திக்கு அப்புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த சித்ரத் தமிழ்க் கொற்றம் உடையோனே
    நாலு திசைகளிலுள்ள புறங்களுள்ளும் அழியாதிருக்கச் (சம்பந்தராக வந்து) சிவபெருமானின் புகழைப் பரப்பிய, அழகிய தமிழ் பாடும் வெற்றியை உடையவனே,
  • சிப்ப(ம்) குடில் கட்டும் அற்பக் குறத்திச் சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா
    சிறிய குடிசை கட்டியுள்ள, கீழ்ஜாதியில் வளர்ந்த குறப்பெண்ணாகிய, வள்ளியின் இனிய சொல்லை விரும்பி ஆசைப்படும் கணவனே.
  • முக்கண் சடைச் சித்தர் உள் புக்கு இருக்கைக்கு முத்தித் துவக்கு உற்று மொழிவோனே
    மூன்று கண்களையும், சடையையும் உடைய சித்த மூர்த்தியாகிய சிவபெருமானது உள்ளத்துள் நுழைந்து படிவதற்கு, முக்தி நிலையைப் பற்றி முதலிலிருந்து உபதேசித்தவனே,
  • முட்டச் சினத்திட்டு முற்பட்டு இணர் கொக்கை முட்டித் தொளைத்திட்ட பெருமாளே.
    முழுக் கோபம் கொண்டு, முன்னே இருந்த பூங்கொத்துக்கள் கூடிய மாமரமாக நின்ற சூரனை எதிர்த்துத் தாக்கி, வேலால் தொளைத்து அழித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com