திருப்புகழ் 1259 பரிமள மலரடு (பொதுப்பாடல்கள்)

தனதன தனதனத் தனதன தனதனத்
தனதன தனதனத் ...... தனதான
பரிமள  மலரடுத்  தகில்மண  முழுகிமைப் 
பரவிய  ம்ருகமதக்  ......  குழல்மானார் 
பருமணி  வயிரமுத்  திலகிய  குழையினிற் 
படைபொரு  வனவிழிக்  ......  கயலாலே 
எரியுறு  மெழுகெனத்  தனிமன  மடையநெக் 
கினிமையோ  டுருகவிட்  ......  டவமேயான் 
இருவினை  நலியமெய்த்  திறலுட  னறிவுகெட் 
டிடர்படு  வதுகெடுத்  ......  தருள்வாயே 
சொரிமத  அருவிவிட்  டொழுகிய  புகர்முகத் 
தொளைபடு  கரமலைக்  ......  கிளையோனே 
துடியிடை  யொருகுறக்  குலமயில்  புளகிதத் 
துணைமுலை  தழுவுபொற்  ......  புயவீரா 
அரியன  பலவிதத்  தொடுதிமி  லையுமுடுக் 
கையுமொகு  மொகுவெனச்  ......  சதகோடி 
அலகையு  முடனடித்  திடவடி  யயிலெடுத் 
தமர்செயு  மறுமுகப்  ......  பெருமாளே. 
  • பரிமள மலர் அடுத்து அகில் மணம் முழுகி மைப் பரவிய ம்ருகமதக் குழல் மானார்
    நறு மணம் உள்ள மலர்கள் வைக்கப் பெற்றதாய், அகிலின் நறு மணத்தில் முழுகியதாய், கருநிறம் பரந்துள்ளதாய், கஸ்தூரி அணிந்துள்ள கூந்தலை உடைய மாதர்களின்
  • பரு மணி வயிரம் முத்து இலகிய குழையினில் படை பொருவன விழிக் கயலாலே
    பருத்த ரத்தினங்கள், வைரம், முத்து (இவை) விளங்கும் காதணியின் மீது போர் புரிவது போல் (நீண்டு பாயும்) கயல் மீன் போன்ற கண்ணாலே,
  • எரி உறு மெழுகு எனத் தனி மனம் அடைய நெக்கு இனிமையொடு உருகவிட்டு
    நெருப்பில் இடப்பட்ட மெழுகைப் போல் துணையின்றி நிற்கும் என் மனம் நன்று நெகிழ்ந்து, அந்தச் சிற்றின்பத்தில் உருகும்படி விட்டு,
  • அவமே யான் இரு வினை நலிய மெய்த் திறலுடன் அறிவு கெட்டு இடர் படுவது கெடுத்து அருள்வாயே
    வீணிலே நான் இரண்டு வினைகளும் என்னை வாட்ட, உண்மை வலிமையுடன் அறிவும் கெட்டுப்போய் வேதனைப்படுவதை ஒழித்து அருள் புரிவாயாக.
  • சொரி மத அருவி விட்டு ஒழுகிய புகர் முகத் தொளை படு கர மலைக்கு இளையோனே
    சொரிகின்ற மத நீரை அருவி போல் ஒழுக்கெடுக்கும் புள்ளி கொண்ட முகமும், தொளை கொண்ட துதிக்கையையும் உடைய யானையாகிய கணபதிக்குத் தம்பியே,
  • துடி இடை ஒரு குறக் குல மயில் புளகித துணை முலை தழுவு பொன் புய வீரா
    உடுக்கை போன்ற இடையை உடைய, ஒப்பற்ற குறக்குலத்து மயில் போன்ற வள்ளியின் புளகாங்கிதம் கொண்ட இரண்டு மார்பகங்களையும் தழுவும் அழகிய புயங்களை உடைய வீரனே,
  • அரியன பல விதத்தொடு திமிலையும் உடுக்கையும் மொகு மொகு எனச் சத கோடி அலகையும் உடன் நடித்திட
    அருமையான பல வகைப்பட்ட திமிலை என்ற பறை வகைகளும், உடுக்கை வாத்தியமும் மொகு மொகு என்று ஒலிக்கவும், நூற்றுக் கணக்கான பேய்களும் கூடவே நடனமாட,
  • வடி அயில் எடுத்து அமர் செயும் அறு முகப் பெருமாளே.
    கூர்மையான வேலாயுதத்தை எடுத்து போர் செய்கின்ற, ஆறு திரு முகங்களை உடைய, பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com