திருப்புகழ் 1258 நாகாங்க ரோமம் (பொதுப்பாடல்கள்)

தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த
தானாந்த தானந் தாத்த ...... தனதான
நாகாங்க  ரோமங்  காட்டி  வாரேந்து  நாகங்  காட்டி 
நாமேந்து  பாலங்  காட்டி  ......  யபிராம 
நானாங்க  ராகங்  காட்டி  நாகேந்த்ர  நீலங்  காட்டி 
நாயேன்ப்ர  காசங்  காட்டி  ......  மடலூர 
மேகாங்க  கேசங்  காட்டி  வாயாம்பல்  வாசங்  காட்டி 
மீதூர்ந்த  போகங்  காட்டி  ......  யுயிரீர்வார் 
மேல்வீழ்ந்து  தோயுந்  தூர்த்தன்  மோகாந்த  காரந்  தீர்க்க 
வேதாந்த  தீபங்  காட்டி  ......  யருள்வாயே 
ஏகாந்த  வீரம்  போற்றி  நீலாங்க  யானம்  போற்றி 
யேடார்ந்த  நீபம்  போற்றி  ......  முகில்தாவி 
ஏறோங்க  லேழுஞ்  சாய்த்த  நான்மூன்று  தோளும்  போற்றி 
யார்வேண்டி  னாலுங்  கேட்ட  ......  பொருளீயும் 
த்யாகாங்க  சீலம்  போற்றி  வாயோய்ந்தி  டாதன்  றார்த்து 
தேசாங்க  சூரன்  தோற்க  ......  மயிலேறிச் 
சேவேந்தி  தேசம்  பார்க்க  வேலேந்தி  மீனம்  பூத்த 
தேவேந்த்ர  லோகங்  காத்த  ......  பெருமாளே. 
  • நாக அங்க ரோமம் காட்டி வார் ஏந்து நாகம் காட்டி நா(ம)ம் ஏந்து பாலம் காட்டி அபிராம நானாங்க ராகம் காட்டி நாக இந்த்ர நீலம் காட்டி
    பாம்பு போன்ற அங்கமாகிய பெண்குறியின் ரோமத்தைக் காட்டி, கச்சு அணிந்த மலை போன்ற மார்பகங்களைக் காட்டி, புகழத் தக்க நெற்றியைக் காட்டி, அழகிய பலவிதமான வாசனை மிக்க திரவியங்களைக் காட்டி, தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட நீலோற்பல மலர் போன்ற கண்களைக் காட்டி,
  • நாயேன் ப்ரகாசம் காட்டி மடல் ஊர மேக அங்க கேசம் காட்டி வாய் ஆம்பல் வாசம் காட்டி மீது ஊர்ந்த போகம் காட்டி உயிர் ஈர்வார்
    அடியேன் என் மோகத்தை வெளிப் படுத்தி மடல் ஏறும்படி* மேகம் போல் கருமையான கூந்தலைக் காட்டி, ஆம்பல் போன்ற வாயின் நறுமணத்தைக் காட்டி, மேலே படுத்து அனுபவிக்கும் போக சுகத்தைக் காட்டி, உயிரை வாங்குபவர்களான விலைமாதர்களின்
  • மேல் வீழ்ந்து தோயும் தூர்த்தன் மோக அந்தகாரம் தீர்க்க வேதாந்த தீபம் காட்டி அருள்வாயே
    மேலே விழுந்து புணரும் துஷ்டனாகிய என்னுடைய காம மயக்கம் என்னும் இருளை ஒழிக்க, வேதத்தின் முடிவாகிய உண்மைப் பொருளைக் காட்டி எனக்கு அருள் புரிவாயாக.
  • ஏகாந்த வீரம் போற்றி நீல அங்க யானம் போற்றி ஏடு ஆர்ந்த நீபம் போற்றி முகில் தாவி ஏறு ஓங்கல் ஏழும் சாய்த்த நான் மூன்று தோளும் போற்றி
    இணை இல்லாத உனது வீரத்தை போற்றுகின்றேன். நீல நிற அங்கத்தை உடைய (உனது) விமானமாகிய மயிலைப் போற்றுகின்றேன். மலர்கள் நிறைந்த கடப்ப மாலையைப் போற்றுகின்றேன். மேகங்கள் தாவி மேலேறிப் படியும் (சூரனது) ஏழு மலைகளையும் தொலைத்த உனது பன்னிரு புயங்களையும் போற்றுகின்றேன்.
  • யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் த்யாகாங்க சீலம் போற்றி
    யார் வேண்டிக் கொண்டாலும் கேட்ட வரத்தைக் கொடுத்தருளும் கொடைப் பெருமை கொண்ட உனது அலங்கார குணத்தைப் போற்றுகின்றேன்.
  • வாய் ஓய்ந்திடாது அன்று ஆர்த்து தேசாங்க** சூரன் தோற்க மயில் ஏறிச் சேவு ஏந்தி தேசம் பார்க்க வேல் ஏந்தி மீனம் பூத்த தேவேந்த்ர லோகம் காத்த பெருமாளே.
    வாய் ஓயாமல் முன்பு கூச்சலிட்டவனும், பத்து உறுப்புக்களை உடையவனுமாகிய சூரன் தோற்றுப்போக, மயிலின் மீது ஏறி சேவற் கொடியைக் கையில் ஏந்தி, நாட்டில் உள்ளவர்கள் காணும்படி வேலாயுதத்தைத் தாங்கி, நட்சத்திரங்கள் விளங்கி நின்ற தேவர்களின் விண்ணுலகத்தைக் காப்பாற்றிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com