திருப்புகழ் 1257 நற்குணம் உளார் (பொதுப்பாடல்கள்)

தத்ததன தான தத்த, தத்ததன தான தத்த
தத்ததன தான தத்த ...... தனதான
நற்குணமு  ளார்த  மைப்பொல்  மைக்குழலி  லேசி  றக்க 
நற்பரிம  ளாதி  துற்ற  ......  மலர்சூடி 
நச்சுவிழி  யால்ம  யக்கி  யிச்சைபல  பேசி  யுற்று 
நற்பொருள  வாம  னத்தர்  ......  வசமாகி 
வெற்பனைய  மாத  னத்தை  பொற்புறவு  றாவ  ணைத்து 
மெத்தமய  லாகி  நித்த  ......  மெலியாதே 
வெட்சிகமழ்  நீப  புஷ்ப  வெற்றிசிறு  பாத  பத்ம 
மெய்க்கிருபை  நீய  ளிப்ப  ......  தொருநாளே 
ரத்தினப  ணாநி  ருத்தன்  மெய்ச்சுதனு  நாடு  மிக்க 
லக்ஷணகு  மார  சுப்ர  ......  மணியோனே 
நற்றிசையு  மேறி  யிட்ட  பொய்ச்சமணை  வேர  றுத்து 
நற்றிருநி  றேப  ரப்பி  ......  விளையாடும் 
சற்சனகு  மார  வ்ருத்தி  அற்புதசி  வாய  னுக்கொர் 
சற்குருவி  நோத  சித்ர  ......  மயில்வீரா 
சக்ரதரன்  மார்ப  கத்தி  லுக்ரமுட  னேத  ரித்த 
சத்தியடை  யாள  மிட்ட  ......  பெருமாளே. 
  • நல் குணம் உளார் தமைப் பொல் மைக் குழலிலே சிறக்க நல் பரிமள ஆதி துற்ற மலர் சூடி
    நல்ல குணம் படைத்தவர்களைப் போல, கரிய கூந்தலில் அழகு விளங்கும்படி நல்ல வாசனைத் திரவியங்கள் முதலியவற்றைத் தூவி நெருங்கி நிறைந்த மலர்களை முடித்துக் கொண்டு,
  • நச்சு விழியால் மயக்கி இச்சை பல பேசி உற்று நல் பொருள் அவா(வு)ம் மனத்தர் வசமாகி
    விஷம் தோய்ந்த கண்களால் (ஆடவர்களை) மயக்குவித்து, காம இச்சை ஊட்டும் இனிய மொழிகளைப் பேசிக் கொண்டிருந்து, விலை உயர்ந்த பொருளைப் பெற ஆசைப்படும் மனத்தைக் கொண்ட விலைமாதர்களின் வசப்பட்டு,
  • வெற்பு அனைய மா தனத்தை பொற்புற உறா அணைத்து மெத்த மயலாகி நித்தம் மெலியாதே
    மலை போன்ற பெரிய மார்பகங்களை அழகு பெற உற்று அடைந்து, அணைத்து மிகவும் மோகம் கொண்டு நாள் தோறும் (நான்) மெலிந்து போகாமல்,
  • வெட்சி கமழ் நீப புஷ்ப(ம்) வெற்றி சிறு பாத பத்மம் மெய்க் கிருபை நீ அளிப்பது ஒரு நாளே
    வெட்சி மலர், நறு மணம் வீசும் கடப்ப மலர் (இவைகளைக் கொண்டதும்) வெற்றியைத் தருவதுமான சிறிய திருவடித் தாமரையைக் கொண்டவனே, உண்மையான திருவருளை நீ கொடுத்து அருளுகின்ற ஒரு நாள் கிட்டுமோ?
  • ரத்தின பணா நிருத்தன் மெய்ச் சுதனு(ம்) நாடு மிக்க லக்ஷண குமார சுப்ரமணியோனே
    ரத்தினங்கள் கொண்ட படங்களை உடைய (காளிங்கன் என்னும்) பாம்பின் மேல் நடனம் செய்தவனாகிய கண்ணனின் (திருமாலின்) உண்மைக் குமாரனான மன்மதனும் விரும்பும்படியான மிகுந்த அழகைக் கொண்ட குமார சுவாமியாகிய சுப்ரமணியனே,
  • ந(நா)ல் திசையும் ஏறி இட்ட பொய்ச் சமணை வேர் அறுத்து நல் திரு நிறெ பரப்பி விளையாடும் சத்சன குமார
    நான்கு திக்குகளிலும் பரவி இருந்த பொய்யராகிய சமணர்களை வேரோடு அறுத்து எறிந்து சிறந்த திரு நீற்றைப் பரப்பி விளையாடிய (திருஞானசம்பந்தன் என்னும்) நல்லவனே, குமார வேளே,
  • வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஓர் சத் குரு விநோத சித்ர மயில் வீரா
    செல்வப் பொருள் அற்புத மூர்த்தி சிவாய என்னும் ஐந்தெழுத்தின் மூலப் பொருள் (ஆகிய சிவ பெருமானுக்கு) ஒப்பற்ற குரு நாதனே, விநோதமான அழகு கொண்ட மயில் மீதமர்ந்த வீரனே,
  • சக்ரதரன் மார்பு அகத்தில் உக்ரமுடனே தரித்த சத்தி அடையாளம் இட்ட பெருமாளே.
    (திருமாலின்) சக்கரத்தைத் தரித்திருந்த தாரகாசுரனுடைய மார்பில், வலிமையுடன் நீ ஏந்தியுள்ள சக்தி வேலைக் கொண்டு அடையாளம் இட்ட பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com