தத்தனா தனத்த தத்தனா தனத்த
தத்தனா தனத்த ...... தனதான
நச்சுவாள் விழிக்கொ டெற்றியே தனத்தை
நத்துவார் சுகத்தில் ...... நலமாக
நட்டமா மனத்தை யிட்டமே கொடுத்து
நத்துவாழ் கடற்கு ...... ளணைபோலே
கச்சமே செலுத்தி யச்சமே படுத்து
கட்டஏழ் பிறப்பு ...... விடவேதான்
கற்றநூ லுகக்க வெட்கமே செறித்த
கட்டனே னினைப்ப ...... தொருநாளே
இச்சையே செலுத்தி யுச்சிதாள் பலிக்கு
மிட்டமா லவற்கு ...... மருகோனே
எற்றுவா ரிதிக்குள் முற்றிநீள் பொருப்பை
யெக்கிநேர் மடித்த ...... இளையோனே
மெச்சவே புடைத்த முத்தமார் தனத்தி
மிக்கவாள் படைத்த ...... விழியாலே
வெட்டுமா மறத்தி யொக்கவே யிருக்க
வெற்றிவே லெடுத்த ...... பெருமாளே.
- நச்சு வாள் விழி கொ(ண்)டு எற்றியே தனத்தை நத்துவார்
சுகத்தில் நலமாக
விஷம், வாள் (இவைகளை) ஒத்த கண்களைக் கொண்டு (ஆடவர்களைத்) தாக்கியே, பொருளை விரும்புவர்களாகிய விலைமாதர்களின் காம போகத்தில் இன்பம் பெற, - நட்ட மா மனத்தை இட்டமே கொடுத்து நத்து வாழ் கடற்குள்
அணைபோலே கச்சமே செலுத்தி
புதைக்கப்பட்ட சிறந்த மனத்தை விருப்பத்துடன் கொடுத்து, சங்குகள் வாழ்கின்ற கடலிலே அணையிட்டது போல, ஒப்பந்தம் செய்த வகையில் (மனத்தைப்) போக விட்டு, - அச்சமே படுத்து கட்ட ஏழ் பிறப்பு விடவே தான் கற்ற நூல்
உகக்க வெட்கமே செறித்த கட்டனேன் நினைப்பது ஒரு
நாளே
பயத்தையே உண்டு பண்ணுகின்ற, கஷ்டமான ஏழு பிறப்புக்களையும் விட்டுத் தாண்டுவதற்கு, கற்ற சிவ நூல்களில் மகிழ்ச்சி கொள்ள வெட்கமே நிறைந்துள்ள, துன்பங்கள் பீடித்த நான் உன்னை நினைப்பதாகிய ஒரு நாள் வருமோ? - இச்சையே செலுத்தி உச்சி தாள் பலிக்கும் இட்ட மால்
அவற்கு மருகோனே
(வாமனராக வந்து) தமது விருப்பத்தைக் கூறி, (மகாபலி சக்ரவர்த்திக்கு அவனுடைய) தலையில் தமது பாதத்தை வைத்த திருமாலுக்கு மருகனே, - எற்று வாரிதிக்குள் முற்றி நீள் பொருப்பை எக்கி நேர் மடித்த
இளையோனே
அலை வீசும் கடலுக்குள் பரந்து நீண்டிருந்த (சூரனின்) எழு கிரியை வேலால் ஊடுருவச் செலுத்தி நன்கு அழித்த இளையவனே, - மெச்சவே புடைத்த முத்தம் ஆர் தனத்தி மிக்க வாள் படைத்த
விழியாலே
புகழும்படியாக பருத்து எழுந்துள்ள, முத்து மாலை நிறைந்த, மார்பினள், கூர் மிகுந்த வாளாயுதத்தைப் போன்ற தன் கண்களைக் கொண்டு, - வெட்டும் மா மறத்தி ஒக்கவே இருக்க வெற்றி வேல் எடுத்த
பெருமாளே.
(உயிர்களின் வினையை) வெட்ட வல்ல சிறந்த வேடுவச்சி ஆகிய வள்ளி கூடவே இருக்க, வெற்றி வேலைத் திருக்கையில் ஏந்திய பெருமாளே.