திருப்புகழ் 1251 துடித்து எதிர் (பொதுப்பாடல்கள்)

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன ...... தனதான
துடித்தெதிர்  வடித்தெழு  குதர்க்கச  மயத்தவர் 
சுழற்கொரு  கொடிக்கொடி  ......  யெதிர்கூறித் 
துகைப்பன  கிதத்தலை  யறுப்பன  யில்விட்டுடல் 
துணிப்பன  கணித்தலை  ......  மிசைபார 
முடித்தலை  விழுப்பன  முழுக்கஅ  டிமைப்பட 
முறைப்படு  மறைத்திர  ......  ளறியாத 
முதற்பொருள்  புலப்பட  வுணர்த்துவ  னெனக்கொரு 
மொழிப்பொருள்  பழிப்பற  ......  அருள்வாயே 
குடிப்பன  முகப்பன  நெடிப்பன  நடிப்பன 
கொழுத்தகு  ருதிக்கட  ......  லிடையூடே 
குதிப்பன  மதிப்பன  குளிப்பன  களிப்பன 
குவட்டினை  யிடிப்பன  ......  சிலபாடல் 
படிப்பன  திருப்புக  ழெடுப்பன  முடிப்பன 
பயிற்றிய  லகைக்குலம்  ......  விளையாடப் 
பகைத்தெழு  மரக்கரை  யிமைப்பொழு  தினிற்பொடி 
படப்பொரு  துழக்கிய  ......  பெருமாளே. 
  • துடித்து எதிர் வடித்து எழு குதர்க்க சமயத்தவர்
    உடல் பதைத்து, எதிர் எதிரே கூர்மையுடன் எழுகின்ற, முறை கெட்ட தர்க்கம் செய்யும் சமயவாதிகளின்
  • சுழற்கு ஒரு கொடிக் கொடி எதிர் கூறி
    சுழல் போன்ற கூட்டத்துக்கு கோடிக் கணக்கில் எதிர் வாதம் பேசி,
  • துகைப்பன அகிதத் தலை அறுப்பன அயில் விட்டு உடல் துணிப்பன
    மிதித்து வருத்தமுறச் செய்யக் கூடிய தீமைகளின் அதிகார நிலையை அறுத்துத் தள்ளக் கூடியதும், வேலாயுதத்தைச் செலுத்தி (பகைவர்களின்) உடலைத் துண்டிக்க வல்லதும்,
  • கணித் தலை மிசை பார முடித்தலை விழுப்பன
    நூல் வல்லவர்களின் தலை மீது உள்ள கர்வம் மிகுந்த தலைமுடியை விழுந்து போகும்படி செய்ய வல்லதும்,
  • முழுக்க அடிமைப் பட முறைப் படு மறைத் திரள் அறியாத
    யாவரும் அடிமைப்படும்படி ஒழுங்காக அமைந்துள்ள வேதக் குவியல்களெல்லாம் கண்டு உணராததுமான
  • முதற்பொருள் புலப்பட உணர்த்துவன்
    மூலப்பொருளை யாவருக்கும் தெரியும்படி தெளிவுடன் தெரிவிப்பேன்.
  • எனக்கு ஒரு மொழிப் பொருள் பழிப்பு அற அருள்வாயே
    (ஆதலால்) நீ எனக்கு ஒப்பற்ற பிரணவத்தின் பொருளை யாரும் பழிக்காத முறையில் உபதேசித்து அருள்வாயாக.
  • குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன
    (போர்க்களத்தில் ரத்தத்தைக்) குடிப்பன ஆகவும், மொள்ளுவன ஆகவும், ஊறுவன ஆகவும், கூத்தாடுவன ஆகவும்,
  • கொழுத்த குருதிக் கடல் இடை ஊடே குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன
    செழிப்புற்றுக் குழம்பாக இருக்கும் ரத்தக் கடலுள் குதிப்பன ஆகவும், ரத்தக் கடலின் அளவை அளவிடுவன ஆகவும், அதில் குளிப்பன ஆகவும், அதைக் கண்டு மகிழ்வன ஆகவும்,
  • குவட்டினை இடிப்பன சில பாடல் படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன
    (அந்த மகிழ்ச்சியில்) மலைகளையும் இடிப்பன ஆகவும், சில பாடல்களை படிப்பன ஆகவும், (முருகன்) திருப்புகழை ஆரம்பித்து முடிப்பன ஆகவும்,
  • பயிற்றி அலகைக் குலம் விளையாட
    இத்தகைய நிகழ்ச்சிகளுடன் பேய்க் கூட்டங்கள் விளையாட,
  • பகைத்து எழும் அரக்கரை இமைப் பொழுதினில் பொடிபடப் பொருது உழக்கிய பெருமாளே.
    பகைத்து எழுந்த அசுரர்களை ஒரு நொடிப் பொழுதில் தூளாகும்படி போர் புரிந்து கொன்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com