திருப்புகழ் · 1252துத்தி நச்சு அரா (பொதுப்பாடல்கள்)

தத்த தத்த தானனம் தத்த தத்த தானனம்
தத்த தத்த தானனத் ...... தனதான

தினம் ஒரு திருப்புகழ் Dinam oru Thiruppugazh

துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ்
சுக்கி லக்க லாமிர்தப் ...... பிறைசூதம்
சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யேடலஞ்
சுத்த சொற்ப கீரதித் ...... திரைநீலம்
புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண்
பொற்பு மத்தை வேணியர்க் ...... கருள்கூரும்
புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்
புற்பு தப்பி ராணனுக் ...... கருள்வாயே
பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம்
பக்க மிட்டு லாவியச் ...... சுரர்மாளப்
பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும்
பத்ம சிட்ட னோடமுத் ...... தெறிமீனக்
கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந்
துட்க முத்து வாரணச் ...... சதகோடி
கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங்
கைப்பி டித்த சேவகப் ...... பெருமாளே.

பத உரை

  • துத்தி நச்சு அரா இளம் பிச்சி நொச்சி கூவிளம்
    புள்ளிகளைக் கொண்டதும், விஷத்தை உடையதுமான பாம்பு, புதிய ஜாதி மல்லிகை மலர், நொச்சிப் பூ, வில்வம்,
  • சுக்கிலக் கலா அமிர்தப் பிறை சூதம்
    வெண்ணிறம் உடையதாய் கலைகளைக் கொண்டதாய் உள்ள அமிர்த மயமான பிறைச் சந்திரன், மாந்தளிர்,
  • சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம்
    சுத்தமான ரத்தநிறப் பாதிரிப் பூ, பொன்னிறமான கொன்றை மலர், தேள்,
  • சுத்த சொல் பகீரதித் திரை நீலம்
    புகழை உடைய, அலைகள் வீசும் கங்கை நதி, நீலோற்பலம்,
  • புத்(து) எருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு மத்தை
    புதிய எருக்க மலர், பெருமை பொருந்திய பிரம கபாலம், கொத்து கொத்தாயுள்ள அறுகம் புல், குளிர்ச்சியான அழகுள்ள ஊமத்தை,
  • வேணியர்க்கு அருள் கூரும்
    (இவைகளை அணிந்த) சடைப் பெருமானாகிய சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய,
  • புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம்
    புத்தியும், அஷ்ட மா சித்திகளும்* வாய்ந்ததும், பெருமையும், சுத்தமும், உண்மையும் கொண்டதுமான உபதேச மொழியை,
  • புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே
    நீர்க்குமிழி போன்ற நிலையில்லாத உயிருள் ஒட்டியுள்ள அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவாயாக.
  • பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம் இட்டு உலாவி
    வரிசையாய் அமைந்துள்ள தோகையை உடைய, அழகிய பச்சை நிறம் கொண்ட வெற்றி வாகனமாகிய மயிலின் பக்கத்தில் ஏறி உலாவி,
  • அச்சுரர் மாள பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி
    அந்த அசுரர்கள் மாண்டு போகும்படிச் செய்து, அவர்களின் பிளவுபட்ட வாய்கள் மாமிசத்தைக் கக்கும்படி வெட்டி எறிந்து,
  • வாய் தரும் பத்ம சிட்டன் ஓட
    அச்சத்தால் வாய்விட்டு அலறிய சூரபத்மனாகிய** மேலோனும் ஓட,
  • முத்து எறி மீனம் கைத்தலை ப்ரவாகையும் தத்தளிக்க
    முத்துக்களை அலைகளால் வீசுவதும், மிகுந்த மீன்களைத் தன்னிடம் கொண்ட பெருவெள்ளமாகிய கடலும் கொந்தளிக்க,
  • மா முறிந்து உட்க
    மாமரமாக மறைந்து நின்ற சூரன் கிளைகள் முறிபட்டு அச்சம் உறவும்,
  • முத்து வாரணச் சத கோடி கைக் களிற்று வாரணம் புக்கு ஒளிக்க
    முத்துக்களை நல்கும் கணக்கற்ற சங்குகளும் துதிக்கையைக் கொண்ட (அஷ்ட திக்கு) யானைகளும் பயந்து ஒளிந்து கொள்ளவும்,
  • வாரணம் கைப் பிடித்த சேவகப் பெருமாளே.
    சேவற் கொடியைக் கையில் ஏந்திய, வல்லமை உடைய பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * அஷ்டமாசித்திகள் பின்வருமாறு: அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல். மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல். கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல். லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல். பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்). பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல். ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல். வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
  • ** பத்ம சிட்டன் = சூர பத்மன். சூரன் பகுதி ஆணவத்தைக் குறிக்கும். பத்மன் பகுதி அறிவைக் குறிக்கும். போருக்குப் பின் ஆணவம் மயிலாயிற்று. பத்மப் பகுதி சேவலாகிக் கொடியாய் உயர்த்தப்பட்டது.
  • * Eight Primary Siddhis (occult powers): aNima: reducing one's body to even less than the size of an atom; mahima: expanding one's body to an infinitely large size; garima: becoming infinitely heavy; laghima: becoming almost weightless; prApti: having unrestricted access to all bodies and places; prAkAmya: realising success everywhere; eesatva: possessing absolute lordship; vasitva: the power to subjugate all.
  • ** pathma sittan = sUra pathman. The sUran part represents arrogance; pathman part denotes Knowledge; at the end of the war, the arrogant part became the peacock and the Knowledge part became the Rooster, hoisted in the staff of Murugan.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout